ஏ.ஐ. ஒரு போதும் மனிதர்களுக்கு மாற்று அல்ல: எஸ்.எஸ்.வி.எம். நிர்வாக அறங்காவலர் பேச்சு
கோவை: கோவை எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில், 'உருமாறும் இந்தியா-2025' மூன்று நாள் மாநாடு நடந்து வருகிறது.2வது நாளான நேற்று, எஸ்.எஸ்.வி.எம்.கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஸ்ரீஷா பேசியதாவது:வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை, ஒவ்வொரு துறையினரும் தங்களுக்கேற்ப பயன்படுத்துகின்றனர். ஏ.ஐ. தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்காக, பயன்படுத்திக் கொள்ளலாம்.ஒரு மாணவராக, கல்வி அசைன்மென்டுக்கு பயன்படுத்தலாம். உங்களின் திறன், தகுதி, கண்ணோட்டத்தை செறிவூட்டவே பயன்படுத்த வேண்டும். அதை மட்டுமே சார்ந்திருப்பவராக மாறிவிடக்கூடாது.ஆசிரியர்கள் இத்தொழில்நுட்பத்தை உரையாடல் திறனை மேம்படுத்தவும், தனித்தன்மையை வெளிக்கொணரவும், யோசனையை மெருகேற்றவும் பயன்படுத்தலாம். எதிர்காலம் மனிதர்களா, செயற்கை நுண்ணறிவா என்ற போட்டிக்களம் அல்ல. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துபவர்கள், பயன்படுத்தாதவர்கள் என்பதற்கான போட்டிக்களம்.ஏ.ஐ. தொழில்நுட்பத்தை, மானுட சமுதாயத்துக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே மெய்யறிவு. நாம் எப்படி நாமாக இருப்பது என்பதை, கற்றுக்கொள்வதே முக்கியம்.இவ்வாறு, அவர் பேசினார்.கங்கா மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் ராஜசபாபதி, ஏ.ஐ. கோட்பாட்டு நெறியாளர் மற்றும் ஆய்வாளர் ஜிபு இலியாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவர்களுடன் மாணவர்கள் விவாதித்தனர்.மாணவ தொழில்முனைவோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் பரிசாக ரூ.75 ஆயிரம், 2ம், 3ம் பரிசாக முறையே ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. கல்வி நிறுவனங்களின் செயலர் மோகன்தாஸ், இயக்குனர் நித்தின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'குரு - சிஷ்ய பந்தம்உருவாக்க முடியாது' எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை பேசுகையில், ''ஏ.ஐ. ஒருபோதும் மனிதனுக்கு மாற்றாகி விட முடியாது. ஒரு ரோபோவால் ஆசிரியர்களை விட, அதிக தகவல்களைக் கூறி விட முடியும். குரு, சிஷ்ய பந்தத்தை, உணர்வுப்பூர்வ பிணைப்பை உருவாக்க முடியாது.ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உதவிகரமான ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ளலாம். துணி துவைத்தல், கிளீனிங் என, உங்களின் வேலைக்கு மாற்றாக, ஓர் இயந்திரம் வந்துவிடும். உங்களின் அறிவுத் திறனுக்கு மாற்றாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வந்து விட முடியாது,'' என்றார்.