தேர்வு நேரத்தில் ஒலி பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு அவசியம்: மாவட்ட அளவில் கண்காணிக்குமா போலீஸ்
திருப்புவனம்: அரசு பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில் மாவட்ட முழுவதும் ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பாக்கின்றனர்.சட்டசபை தேர்தலுக்கு முன் சர்வ கட்சியினர் தெருமுனை பிரசாரம், மாநாடு, பொதுக்கூட்டங்களை துவக்கியுள்ளன. இதற்காக அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை கட்டுப்பாடின்றி பயன்படுத்தி வருகின்றனர்.அனுமதி பெற்றிருந்தாலும், ஒலிபெருக்கிகளை அலறவிடுவதால், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தவிப்பிற்கு உள்ளாகின்றனர்.அனுமதி பெற்ற இடங்கள் தவிர்த்து, அனைத்து இடங்களிலும் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை அலறவிடுகின்றனர்.திருப்புவனத்தில் நிகழ்ச்சி துவங்குவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி விடுகின்றனர். இதனால் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் தவிக்கின்றனர்.தற்போது சி.பி.எஸ்.இ., தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வுக்கு தயாராகும் இம்மாணவர்கள் தவித்து வருகின்றனர். மேலும் மாசி, பங்குனி திருவிழா துவங்க உள்ள நிலையில் கிராமங்களிலும் ஒலிபெருக்கிகள் அலற உள்ளன.இப்போதிருந்தே மாவட்ட போலீஸ் கட்டுப்பாடு விடுத்தால் மட்டுமே, எந்தவித பாதிப்பும் இன்றி மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும். மேலும், வயது முதிந்தவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே கோயில் திருவிழா, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.