உயர்நிலையை மேல்நிலையாக தரம் உயர்த்த... மனமிருந்தால் மார்க்கமுண்டு! எதிர்காலத்துக்கு கை கொடுத்தால் வசந்தகாலம்
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.கோவை - மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 470 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், 8 கி.மீ., தொலைவில், வெள்ளக்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளி அல்லது 7 கி.மீ., தொலைவில், நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி சென்று படிக்க வேண்டியுள்ளது. நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற இப்பகுதி பொதுமக்களின் கனவு கனவாகவே உள்ளது.இது குறித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பூச்சியூர், புதுப்பாளையம், ராவுத்துக்கொல்லனுார் உட்பட பகுதிகளில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ராக்கிபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இது தவிர, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி, கதிர் நாயக்கன்பாளையம், குமரபுரம் தொடக்கப் பள்ளிகளில் படித்து முடிக்கும் மாணவர்கள், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை நாடுகின்றனர். இங்கு உயர்நிலைப் பள்ளி மட்டுமே உள்ளதால், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல வெகுதுாரம் செல்ல வேண்டிய சூழல் இருப்பதால், பலர் தங்களுடைய படிப்பை, 10ம் வகுப்போடு நிறுத்திக் கொள்கின்றனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுத்தபோது, பலர் தங்களுடைய சுயநலத்துக்காக அரசிடம் பொய்யான தகவல்களை கூறி, மேல்நிலைப் பள்ளியாகும் வாய்ப்பை தடுத்துவிட்டனர். தற்போது உள்ள தமிழக அரசு, ஏழை குழந்தைகளின் எதிர்கால நலன்களை காக்க, உடனடியாக நரசிம்மநாயக்கன்பாளையம் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.