உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டி திட்டத்தில் தொய்வு: பெயரளவில் உள்ளதாக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

பள்ளிக் கல்வித்துறை மூலம் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அவர்களின் மனரீதியான சிக்கல்களுக்கு தீர்வு காணவும் பல்வேறு முன்னோடி திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. அதில் முக்கிய திட்டமாக 'மாணவர் மனசு' புகார் பெட்டி திட்டம் உள்ளது.மாணவர்களுக்குள் ஏற்படும் மன அழுத்தங்கள், மோதல்கள், கேலி வதை, குடும்பச் சூழலால் ஏற்படும் உளவியல் சிக்கல்கள், பாலியல் தொந்தரவுகள் குறித்து எந்தவித அச்சமுமின்றி ரகசியமாக தெரிவிக்கும் வாய்ப்பை இத்திட்டம் வழங்குகிறது.பள்ளிகளில் மாணவர்கள் இடையே சாதி, மத, பொருளாதாரப் பாகுபாடுகள், சிறு விவாதங்களால் எழும் மோதல்களை துவக்க நிலையிலேயே கண்டறிந்து, தகுந்த நடவடிக்கை எடுக்க இது உதவுகிறது. மனரீதியான சிக்கல்களில் இருந்து விடுபடும் போது மாணவர்களின் கல்வி கற்றல் திறன் இயல்பாகவே அதிகரிக்கிறது.மாவட்டத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என 1300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், 300க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வருகின்றன.அரசு வழிகாட்டுதலின்படி அனைத்து வகைப் பள்ளிகளிலும் 'மாணவர் மனசு' புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். இருப்பினும் மாவட்டத்தில் சில முதன்மை அரசுப் பள்ளிகளில் மட்டுமே இப்பெட்டி வைக்கப்பட்டு முறையாகப் பராமரிக்கப்படுகிறது. கிராமப்புற அரசுப் பள்ளிகள், பெரும்பாலான தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இது வெறும் பெயரளவுக்கு மட்டுமே உள்ளதாக சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பெட்டியில் விழும் கடிதங்களை தலைமை ஆசிரியர், நியமிக்கப்பட்ட பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒருமுறை திறந்து படித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 'மாணவர் மனசு' பெட்டி வைக்கப்படுவதை முதன்மைக் கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.மாணவர்கள் தங்கள் பிரச்னைகளை தயக்கமின்றி எழுதிடும் வகையில் காலை வழிபாட்டுக் கூட்டங்களில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மாணவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கும், ஆரோக்கியமான பள்ளிச் சூழலுக்கும் 'மாணவர் மனசு' திட்டம் ஒரு வழிகாட்டியாக அமைகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு முறையாக கண்காணிக்கப்பட்டால் மட்டுமே மாணவர்கள் இடையே சகோதரத்துவமும், மன அமைதியும் மேலோங்கி கல்வியில் சாதனை படைக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்