புத்தக வாசிப்பை நேசிக்கணும்! திருப்பூர் புத்தக திருவிழா துவங்கியது ; 2 லட்சம் பேர் பார்வையிட ஏற்பாடு
திருப்பூர்: தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், 21வது திருப்பூர் புத்தக திருவிழா, திருப்பூர் காங்கயம் சாலை, வேலன் ஓட்டல் மைதானத்தில் நேற்று துவங்கியது.கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்து பேசுகையில், கடந்தாண்டு, புத்தக கண்காட்சியை ஒரு லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்தாண்டு, 2 லட்சம் பேர் பார்வையிட வேண்டும். குறிப்பாக, மாணவர்கள், இளைஞர்கள் அதிகளவில் பார்வையிட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. பள்ளிக்கல்வித்துறை, மகளிர் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சார்ந்த அரங்குகளும் இடம் பெற்றுள்ளன, என்றார்.புத்தக கண்காட்சியை திறந்து வைத்து, அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், தகவல் தொடர்பு சாதனங்களின் வலையில் இளைய சமுதாயம் சிக்கியுள்ளது; இதனால், வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. சிறிய கிராமங்களில் உள்ள எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் தான், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை பெறுகின்றன.புத்தகங்கள் தான் வாழ்க்கையை செம்மைப்படுத்தும். திருப்பூர் புத்தக கண்காட்சியில் பதிப்பகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இது, படிக்கும் சூழ்நிலையை அதிகப்படுத்தி இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது என்றார்.மேயர் தினேஷ் குமார் பேசுகையில், புத்தக கண்காட்சியில் அனைத்து துறை சார்ந்த புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. ஒரே இடத்தில் அனைத்து விஷயங்களையும் மக்கள் அறிந்து கொள்ளலாம், என்றார். முன்னதாக, பின்னல் புக் டிரஸ்ட் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்றார்.அமைச்சர் கயல்விழி, மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், துணை மேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட நுாலக அலுவலர் கார்த்திகேயன், நன்றி கூறினார். இக்கண்காட்சி, அடுத்த மாதம், 2ம் தேதி வரை நடக்கிறது.புத்தக கண்காட்சியில், மொத்தம், 150 அரங்குகளில், முன்னணி புத்தக நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி உள்ளன. புத்தக திருவிழாவில், ஸ்டால் எண்:16ல் அமைக்கப்பட்டுள்ள தினமலர் அரங்கில், இடம் பெற்றுள்ள புத்தகங்களை குடும்பத்துடன் பார்வையிட்ட வாசகர்.