விடைத்தாள் மாயம்: தேர்ச்சி விகிதம் அதிகரித்து வந்த பள்ளிக்கு நேர்ந்த சோதனை
விழுப்புரம்: சத்தியமங்கலம் அரசு பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முயற்சியால் அதிகரித்து வந்த தேர்ச்சி விகிதம், விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தால், இந்த ஆண்டு குறைந்து விடுமோ என்ற கவலை, பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஏப்ரல் 1ம் தேதி, இதே பள்ளியைச் சேர்ந்த, 176 மாணவர்களும், மேல்பாப்பாம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், 25 பேரும், சத்தியமங்கலம் ராஜா தேசிங்கு வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள், 20 பேரும், 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் பொதுத் தேர்வெழுதினர். இவர்களின், 221 விடைத்தாள்களை அன்று மாலை, அஞ்சலக ஊழியர், பஸ்சில் கொண்டு சென்றபோது மாயமானது. சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் கிராமப்புற மாணவர்கள். இவர்களின் பெற்றோரில், 90 சதவீதம் பேர் விவசாயிகள். சில ஆண்டுகளுக்கு முன், விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தபோது, சத்தியமங்கலம் அரசு பள்ளியும் இதில் தப்பவில்லை. இப்பள்ளியில், மாணவர்களின் சேர்க்கை சதவீதமும் குறையும் நிலை ஏற்பட்டது. அத்துடன் ஆசிரியர்கள் பற்றாக்குறை, இப்பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டது. விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், தனியாக டியூஷன் படிப்பதற்கும் வசதி இல்லாதவர்கள். இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பாதிக்காமல் இருக்க, கல்வித் தரத்தையும், தேர்ச்சி சதவீதத்தையும் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம், இப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருக்கு ஏற்பட்டது. இவர்களின் ஏற்பாட்டின் படி, ஆசிரியர்களின் பற்றாக்குறையை சமாளிக்க, இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைகளின் உதவியோடு, கடந்த சில ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களை நியமித்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு எடுத்து பாடம் நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளில் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து வந்தது. இப்பகுதியில் இருந்து வெளியிடங்களுக்கு மாணவர்கள் செல்வதும் குறைந்து வந்தது. இந்நிலையில், இப்பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமானது, தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் உதவி செய்தவர்களையும்; இதற்கான முயற்சி எடுத்த, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரையும் சோர்வடையச் செய்துள்ளது. இந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது அல்லது இரண்டாம் தாளுக்கான மதிப்பெண்ணை வழங்குவது என, எந்த முடிவை கல்வித் துறை எடுத்தாலும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கையை, கல்வித்துறை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் கல்வித்துறையின் எந்த ஒரு அதிகாரியும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரையும், மாணவர்களையும் சந்தித்து நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கையை எடுக்கவில்லை. விடைத்தாள்கள் தொலைந்ததால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலுடனே, இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து தேர்வை சந்தித்து வருகின்றனர். இதனால், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறையுமோ என்ற அச்சம், பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.