மருத்துவ கல்லூரியியின் சிறப்புப் பாடப்பிரிவுக்கு பேராசிரியர் நியமிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியில், சிறப்பு பாடப் பிரிவில், பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை, தி.நகரைச் சேர்ந்த, டாக்டர் எம்.சந்திரசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனு: சென்னை மருத்துவக் கல்லூரியில், சிறப்பு பாடப் பிரிவாக, நாளமில்லா சுரப்பி படிப்பு, நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படிப்புக்கு, பேராசிரியர், இணைப் பேராசிரியர் இருக்க வேண்டும். அவர்கள் இருந்தால் தான், இந்திய மருத்துவ கவுன்சில், இந்தப் படிப்புக்கு அங்கீகாரம் வழங்கும். தற்போது, பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்பவில்லை என்றால், இப்படிப்புக்கான அங்கீகாரம் ரத்தாகி விடும். இந்நிலையில், ஆகஸ்ட், இரண்டாவது வாரத்தில், எம்.சி.ஐ., அதிகாரிகள், ஆய்வுக்கு வர உள்ளனர். இந்தியாவில், இது ஒரு அபூர்வ படிப்பு. ஒவ்வொரு ஆண்டும், ஏழு டாக்டர்கள் தான், இதில் பயிற்சி பெறுகின்றனர். நாளமில்லா சுரப்பி துறையின் வளர்ச்சிக்காக, நான் மிகவும் பாடுபட்டுள்ளேன். எனவே, கல்லூரியில் காலியாக உள்ள, பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். படிப்புக்கு அங்கீகாரம் ரத்து செய்ய, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதிலளிக்க, கூடுதல் அரசு பிளீடர் ராஜகோபாலன், எம்.ஜி.ஆர்., பல்கலை சார்பில், வழக்கறிஞர் நர்மதா சம்பத், மருத்துவ கவுன்சில் சார்பில், வழக்கறிஞர் ராமன் ஆகியோர், "நோட்டீஸ்" பெற்றுக் கொண்டனர். ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.