உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு இல்லை: நஷ்டஈடு கோரி ஐகோர்ட்டில் மனு

சென்னை, ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த, லட்சுமி சுரேஷ் என்பவர், தாக்கல் செய்த மனு: என் மகள் அக்ஷயா, சென்னையில் உள்ள, நிகர்நிலைப் பல்கலையில், பொறியியல் படிக்கிறார். கல்லூரி மாணவர்களுக்கு என, கலாசாரப் போட்டி நடத்துவதாக, இணையதளம் மற்றும் ஊடகங்களில், விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. அண்ணா பல்கலை, சென்ட்ரல் பொறியியல் கல்லூரியின், மாணவர்கள் சங்கம், போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்தது. 25 லட்சம் ரூபாய்க்கு, பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. அண்ணா பல்கலையில் நடந்த போட்டியில், என் மகள் அக்ஷயா, கலந்து கொண்டு வெற்றி பெற்றார். விளம்பரம் செய்தபடி, என் மகளுக்கு, பரிசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பரிசு கொடுக்கப்படவில்லை. பாராட்டுச் சான்றிதழ் மட்டும் கொடுத்தனர். முறையான பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே, உறுதியளித்தபடி, விளம்பரம் அளித்தபடி, என் மகளுக்கு, உரிய பரிசை வழங்க, உத்தரவிட வேண்டும். நஷ்டஈடாக, 5 லட்சம் ரூபாயும், வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது. மனுவை, நீதிபதி சசிதரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.சத்தியநாராயணன் ஆஜரானார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அண்ணா பல்கலையின், சென்ட்ரல் பொறியியல் கல்லூரியின், "டீன்" உள்ளிட்டோருக்கு, "நோட்டீஸ்" அனுப்ப, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார். விசாரணையை, இம்மாதம், 22ம் தேதிக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்