உயர் மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு ரத்து விவகாரம்: லோக் சபாவில் ரகளை
உயர் மருத்துவ கல்வியில், இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்தும், இதுகுறித்து அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக் கோரியும், எம்.பி.,க்கள் நடத்திய அமளி காரணமாக, லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த அல்டாமஸ் கபீர், ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாளில், எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். அந்த உத்தரவுக்கு, அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இதுகுறித்து, நேற்று பார்லிமென்ட்டில், பிரச்னை வெடித்தது. லோக்சபா கூடியதும், கேள்வி நேரத்தை ரத்து செய்து, இந்த பிரச்னை பற்றி விவாதிக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. எம்.பி., சரத் யாதவ் கோரிக்கையை ஏற்று, விவாதத்திற்கு, சபாநாயகர் மீரா குமார் அனுமதியளித்தார். ஓய்வு பெறும் நாளுக்கு முந்தைய நாளில், போகிற போக்கில், அப்போதைய தலைமை நீதிபதி, இப்படியொரு உத்தரவை போட்டுவிட்டு சென்றுள்ளார். இது ஏற்கத்தக்கது அல்ல. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு என்பது, அரசியலமைப்பு சட்டமே தரக்கூடியது. அந்த இடஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட்டோ, பார்லிமென்டோ கை வைக்க முடியாது. அவ்வாறு செய்தால், அரசியலமைப்பு சட்டத்தையே மீறுவதற்கு சமம். இவ்வாறு அவர் பேசினார். இறுதியாக, பதிலளித்துப் பேசிய அமைச்சர் கபில் சிபல், "இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்படும்" என்றார். இதைக் கேட்டவுடன், அனைத்து எம்.பி.,க்களும் ஆவேசமாக எழுந்தனர். "இடஒதுக்கீடு, எங்கள் பிறப்புரிமை. அதை, யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. இந்த விஷயத்தில், மேல் முறையீடு செய்தால், அது காலம் கடத்தும் நடவடிக்கை; இதை ஏற்க முடியாது. அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை, உடனடியாக கொண்டு வருவதே, ஒரே தீர்வு" என்றனர். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., எம்.பி.,க்களும் ரகளையில் இறங்கினர். சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட ஆரம்பித்தனர். கோஷங்கள் எழுப்பப்பட்டதால், அமளி ஏற்பட்டது. இதையடுத்து, அவையை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.