அங்கன்வாடி மையத்தில் காத்திருக்கும் ஆபத்து - உடனடி நடவடிக்கை உண்டா?
ஆனைமலை: ஆனைமலை அடுத்துள்ள அர்த்தநாரிப்பாளையத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட கழிப்பிடத்தின் தொட்டி உடைந்து மூடப்படாமல் உள்ளது. இதனால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனைமலை அடுத்துள்ள அர்த்தநாரிப்பாளையத்தில் அமைத்துள்ளது ஒருங்கிணைந்த குழந்தைகள் நலமையம். இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர். இந்த மையத்தில் பயிலும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஒருவரும், சமையல் உதவியாளர் என இரண்டு பேர் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள குழந்தைகளுக்கு கட்டப்பட்ட கழிப்பிடம் முறையான பராமரிப்பு இன்றியுள்ளது. கழிப்பிட குழியும் உடைந்து மூடப்படமால் திறந்து கிடக்கிறது. பச்சிளம் குழந்தைகள் பயிலும் இடத்தில், பாதுகாப்பு இல்லாத கழிப்பிட குழியால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மூடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.