உள்ளூர் செய்திகள்

இளைஞர்களை நல்வழிபடுத்த சீர்திருத்த மையங்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை

சென்னை: இளைஞர்களை நல்வழிபடுத்த சிறைக்கு வெளியிலும், சீர்திருத்த மையம் ஏற்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்து உள்ளது. திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சென்னை போலீஸ் கமிஷனர் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆவணங்கள் முறையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்றும் சரிவர பரிசீலிக்காமல் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் மனுக்களில் கூறப்பட்டது. மனுக்களை நீதிபதிகள் தனபாலன், சொக்கலிங்கம் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு, அரசு தரப்பில் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் கோவிந்தராஜன் ஆஜராகினர். இவ்வழக்கில் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: கைதுக்கான உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள முகாந்திரங்களுக்கு மதிப்பு இல்லை. எனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 36 வயது வரை உள்ளவர்கள். இவர்கள் திருட்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்படும் இளைஞர்கள், மற்ற கிரிமினல் வழக்குகளில் கைதானவர்களுடன் சேர்ந்து இருக்கும் போது, இந்த இளைஞர்களை சிறை அதிகாரிகளால் சீர்திருத்த முடியுமா? இளைஞர்களை சீர்திருத்த ஒரு திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். சிறைகளில் மட்டும் அல்லாமல் சிறைக்கு வெளியிலும் தனியாக மையம் ஏற்படுத்த வேண்டும். எனவே சிறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோருடன் ஆலோசித்து இளைஞர்களுக்கான தனி சீர்திருத்த மையத்தை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். இந்த பரிந்துரையை சமூக பொறுப்புடன், சமூக வளர்ச்சியோடு, அரசு கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். நீதிமன்றத்துக்கு உதவிய வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, கோவிந்தராஜன் மற்றும் சிறைத் துறை டி.ஐ.ஜி. ஆகியோரை பாராட்டுகிறோம். இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்