பள்ளி மாணவர்கள் இடை நிற்றல் இன்றி வருவதை உறுதி செய்ய அறிவுறுத்தல்
தர்மபுரி: அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கல்வி செயலாக்க கூட்டம், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் கடந்த, 2022 - 23ம் கல்வி ஆண்டில் மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விழுக்காடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கிராமப்புற மாணவர்கள் திறனறி தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் வகையில், மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை, அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் வழங்க வேண்டும்.மாணவர்கள் இடை நிற்றல் இன்றி, 100 சதவீதம் பள்ளிக்கு வருவதை, தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு, கற்பிக்கும் முறை மற்றும் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் முறைகளை உற்று நோக்கி, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும். பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மை, கூரை பராமரிப்பு, சுற்றுச்சுவர், கழிப்பிட வசதி, பள்ளி துாய்மை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். தமிழ்வழி சான்றிதழ், புதுமைப்பெண் திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்த விபரங்களை மாணவ, மாணவியர் அறிய காட்சிப்படுத்தப்படுவதை, தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.