உள்ளூர் செய்திகள்

கள்ளர் பள்ளி பொது மாறுதல் கலந்தாய்வு; ஆசிரியர்கள் பணிமூப்பு பட்டியலுக்கு தடை

மதுரை: கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில் நடத்தவுள்ள பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி மூப்பு பட்டியலுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல் வக்கம்பட்டி விஜயகுமார் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் தெப்பத்துப்பட்டி அரசு கள்ளர் மேல் நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு காத்திருக்கிறேன். இந்நிலையில் கலந்தாய்வுக்கான பணி மூப்பு பட்டியலை கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதற்கான வழிகாட்டுதல்கள் 2023-ல் வெளியிடப்பட்டது.அதன்படி கள்ளர் சீரமைப்பு பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். இதற்கு மாறாக ஒரு பள்ளியில் 6 மாதம் பணிபுரிந்தவர் பணிமூப்பு பட்டியலில் எனக்கு முன் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கும், பணி மூப்பு பட்டியலுக்கும் தடை விதித்தும், பணி மூப்பு பட்டியலை சரி செய்த பின் கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியாகவுரி விசாரித்து, ஆட்சேபனை தெரிவிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படாததால், கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் 12.3.2024ல் வெளியிட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பொது இடமாறுதலுக்கான பணி மூப்பு பட்டியலுக்கு தடை விதிக்கப்படுகிறது&' என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்