உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை வயதினை மாநில அரசு தெளிவுபடுத்துமா?: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் குழப்பம்

புதுச்சேரி: குழந்தைகளின் உளவியல், மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவர்களை மிக இளம் வயதில் பள்ளியில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் கடந்த 2022ம் ஆண்டு உத்தரவிட்டது.மேலும் 2020ல் வகுக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி அனைத்து குழந்தைகளும் 3 வயது முதல் 8 வயது வரையில் ஐந்து ஆண்டுகளுக்கு கல்வி பயிலும் வாய்ப்பினை கட்டாயம் உருவாகக்கி தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.அதன்படி பிரி ஸ்கூல் எனப்படும் அங்கன்வாடி கல்வி மூன்று ஆண்டுகளும், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வி இரண்டு ஆண்டுகளும் வழங்க அறிவுறுத்தப்பட்டது.இதனையடுத்து கடந்தாண்டு மத்திய கல்வி அமைச்சகம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியது. அதில் அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் 6-வயது முடித்த பின்னரே முதலாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என, அறிவுறுத்தியது.ஆனால் இந்த உத்தரவினை புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளி ஏதும் கண்டுகொள்ளாமல் 5 வயதில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்த்தனர்.அதை கண்டு கொள்ளாமல் இருந்த மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் அதிரடியாக அனைத்து மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் கடந்த ஆண்டு இரண்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் அமலுக்கு வந்தது.நடப்பு கல்வி ஆண்டில் முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. பிரீ கேஜிக்கு மூன்று வயதும், எல்.கே.,ஜிக்கு நான்கு வயதும், யு.கே.ஜி., க்கு ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டுமென்றால் 6 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.ஆனால், இந்த கல்வியாண்டு முடியும் தருவாயில் உள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வழக்கம்போல் 5 வயது முதல் துவங்கியே நடந்து வருகின்றது. தனியார் பள்ளிகளை சேர்க்கைக்காக நாடும் பெற்றோர்களிடம், அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.,பாடத்திட்டம் உள்ளது.அங்கும் 5 வயதில் இருந்து தான் சேர்க்கின்றனர். எனவே கவலைப்படாமல் சேருங்கள் என்று சேர்த்து வருகின்றனர்.ஆனால், மற்றொரு பக்கம் ஜிப்மர், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் 6 வயது பூர்த்தியடைந்தால் மட்டுமே முதல் வகுப்பில் சேர்க்கப்படும் என அறிவித்து, மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை துவக்கியுள்ளன.இதனால் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை வயது ஐந்தா அல்லது ஆறா என்று தெரியாமல் புதுச்சேரி பெற்றோர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர். எதிர்காலத்தில் பொது தேர்வு எழுதும்போது வயது பிரச்னை காரணமாக அத்தேர்வுகளை எழுத முடியாமல் போய்விடுமா என்று அச்சமடைந்துள்ளனர்.வழக்கமாக தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்,ஒவ்வொரு ஆண்டும் குவியும் விண்ணப்பங்களுக்கேற்ப மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்து கொள்ளும், முதல் வகுப்பில் ஏ, பி, சி என்று கூடுதலாக பிரிவுகளை உருவாக்கி வகுப்புகளை நடத்துவது வழக்கம்.பள்ளி சேர்க்கை வயது ஐந்து அல்லது ஆறா என்று தெரியாததால் கூடுதலாக இந்தாண்டு வகுப்புகளை கூடுதலாக்க முடியாமல்தயக்கம் காட்டி வருகின்றன. மாணவர்களின் எதிர்காலநலன் விஷயத்தில் மாநில அரசு மவுனம் காக்காமல் தெளிவாக முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்