அரசு பள்ளி ஆண் மாணவர்களின் தேர்ச்சி குறையுது! கவனத்தில் கொள்ளுமா பள்ளிக்கல்வித்துறை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் ஆண் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 90 சதவீதத்திற்கு கீழ் குறைந்து வருகிறது. இவர்களில் பெரும்பாலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் இருப்பதால் தேர்ச்சி அடைய முடியாமல் போன காரணத்தை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும்.மாவட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, 2 வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. தேர்ச்சியில் பின்தங்கி விட்டதால் வரும் கல்வியாண்டில் சதவீதத்தை முன்னேற்ற பள்ளிக்கல்வித்துறை முனைப்புடன் செயல்பட ஆயத்தமாகி வருகிறது. இந்த சூழலில் அரசு பள்ளி ஆண் மாணவர்களின் தேர்ச்சி சதவீதமும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் 4212 ஆண் மாணவர்கள் தேர்வெழுதியதில் 3278 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 88.51 ஆகும். ஆனால் மாணவிகளிலோ 94.82 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் 3260 ஆண் மாணவர்கள் தேர்வெழுதியதில் 2914 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி தவீதம் 89.39 ஆகும். ஆனால் மாணவிகளோ 96.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேற்று வெளியான பிளஸ் 1 தேர்வில் 3464 மாணவர்கள் தேர்வெழுதியதில் 2956 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 85.33 ஆகும். ஆனால் மாணவிகளோ 94.60 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அரசு பள்ளி ஆண் மாணவர்களில் தேர்ச்சி சதவீதம் 90 சதவீதத்திற்குள் குறைந்து வருவது அரசு பள்ளிகளுக்கே ஆபத்தானது என கல்வியாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர். இது கிராமப்புற ஏழை மாணவர்களை நேரடியாக பாதிப்பதுடன், அவர்களின் அடுத்தகட்ட உயர்கல்வி வாய்ப்பையும் குறைக்கிறது. இடைநின்ற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை பொதுத்தேர்வு எழுத அனுமதித்ததால் தேர்ச்சி சதவீதம் குறைந்து விட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தேர்ச்சி பெறாமல் படிப்பில் பின் தங்கும் மாணவர்களும் இடை நிற்கும் அபாயம் உள்ளது. கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது போல் இடைநின்ற மாணவர்களை சேர்த்ததால் தேர்ச்சி குறைந்ததா அல்லது தேர்ச்சி பெறாததால் மாணவர்கள் இடைநின்றனரா என்ற முடிவில்லா கேள்வி தான் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1, 2 வகுப்புகளில் மாணவர்களின் நன்னடத்தை, அவர்களது புற சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. நன்றாக இருக்கும் ஒரு சில அரசு பள்ளிகளை மட்டும் பாராட்டி கொண்டிருக்காமல், பின்தங்கியுள்ள அரசு பள்ளிகளையும் முன்னேற்ற வேண்டும். கிராமப்புற பெண் மாணவர்கள் நன்றாக படிக்கும் அதே சூழலில், ஆண் மாணவர்கள் மட்டும் ஏன் பின்தங்குகின்றனர். அவர்களின் கவன சிதறல் என்ன என்பதை கண்டறிய வேண்டும். அதை சரி செய்து வரும் கல்வியாண்டில் அரசு பள்ளி ஆண் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.