உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு தலைவர் கை துாக்கி தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு

சென்னை: அரசு பள்ளிகளின் கட்டமைப்பு, வளர்ச்சியை மேம்படுத்த, தமிழக அரசு பள்ளி மேலாண்மை குழு அமைத்தது. இதில், 2024-26ம் கல்வியாண்டுக்கான புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.குழுவில், பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள், சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட 24 பேர் இடம் பெற வேண்டும். இவர்களில், 12 பேர் பெண்களாகவும் மற்றும் 18 பேர் பெற்றோராகவும் இருக்க வேண்டும்.கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்துார், மடிப்பாக்கம், வேளச்சேரி, அடையாறு, தரமணி, சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், துரைப்பாக்கம், மேடவாக்கம், இ.சி.ஆர்., உள்ளிட்ட பகுதிகளில், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கான தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.இதற்கான தேர்வில், ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு மூன்று பேர் போட்டியிட்டனர். ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி தலைவரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், பல பள்ளிகளில் கை துாக்க வைத்து, தலைவரை தேர்வு செய்தனர். இதற்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:ஒவ்வொரு பள்ளியிலும், 600 முதல் 1,100 பேர் வரை படிக்கின்றனர். ஆனால், பெற்றோரில் 50 - 100 பேர் தான் அழைக்கப்பட்டு இருந்தனர். தலைவர் தேர்வை ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி தேர்வு செய்ய வலியுறுத்தினோம். பல பள்ளி நிர்வாகத்தினர், அவர்களுக்கு வேண்டிய நபர்களை தலைவராக கொண்டுவர வேண்டி, கையை துாக்க வைத்து ஓட்டெடுப்பு நடத்தினர்.பகை ஏற்பட வாய்ப்புள்ளதால், 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கைதுாக்கவில்லை. மீதமுள்ள, 40 சதவீதம் பேரை கைதுாக்க வைத்து தேர்வு செய்தது விதிமீறல். சில பள்ளியில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி, அனைவர் முன்னே எண்ணி, தலைவரை தேர்வு செய்தனர். விதிமீறில் குறித்து, கல்வித்துறைக்கு புகார் அனுப்பு முடிவு செய்துள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்