டில்லி பல்கலை வளாகத்தை சுத்தம் செய்ய மாணவர் சங்க வேட்பாளர்களுக்கு உத்தரவு
புதுடில்லி: டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலின் போது, பல்கலை வளாக சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள், தோரணங்கள் மற்றும் வர்ணப் பூச்சுகள் இன்னும் சுத்தம் செய்யப்படவில்லை. வளாகத்தை சுத்தம் செய்ய, பல்கலை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தல் செப்.27ல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை மறுநாள் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது பல்கலை வளாகத்தில் தோரணங்கள் கட்டவும், சுவரில் போஸ்டர் மற்றும் பெயின்ட்டால் விளம்பரம் எழுதவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.ஆனால், தேர்தலில் போட்டியிட்டோர் வளாகம் முழுதும் பிரசார தோரணங்களைக் கட்டினர். மேலும், பல்கலை வளாக சுவர்களில் போட்டி போட்டு விளம்பரம் எழுதினர். ஏராளமான் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.பொதுச் சுவர்களை சேதப்படுத்துதல், சிதைத்தல், அசுத்தம் செய்தல் குற்றத்துக்காக டில்லி பல்கலை மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கறிஞர் பிரசாந்த் மஞ்சந்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதித்தது. இதனால், தேர்தல் முடிந்து ஒரு மாதம் நெருங்கும் நிலையில், ஓட்டுக்கள் எண்ணப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன.இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. தேர்தலில் போட்டியிட்ட பானு பிரதாப் சிங், ரோனக் காத்ரி, யாஷ் பன்வார், ரிஷப் சவுத்ரி, லோகேஷ் சவுத்ரி, யாஷ் நந்தல், ராகுல் சிங் தேதா, அமன் கபாசியா, தீபிகா ஜா, சிவம் மவுரியா, ஹிமான்ஷு, ஆர்யன் மான், ரிஷி ராஜ் சிங், ராகுல் ஜான்ஸ்லா, பிரியன்ஷு சவுத்ரி ஆகியோர் ஆஜராகினர்.பல்கலை வளாகத்தை தூய்மைப்படுத்த பல்கலை மற்றும் கல்லூரி நிர்வாகத்துடன் மாணவர்களும் இணைந்து செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், வளாகம் முழுதும் தொங்கும் பிரசார தோரணங்களை அகற்றவும், விளம்பரம் செய்துள்ள சுவர்களுக்கு மீண்டும் வண்ணம் தீட்டவும் நீதிமன்றம் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது.