தற்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழகம் கவர்னர் ரவி வேதனை
சென்னை: நம் நாட்டில் தற்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என கவர்னர் ரவி தெரிவித்தார்.இந்திய செஞ்சிலுவை சங்கம், தமிழக கிளை சார்பில், காந்தி சிலை திறப்பு நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.எழும்பூரில் அச்சங்கம் வளாகத்தில், காந்தியின் மார்பளவு சிலையை கவர்னர் ரவி திறந்து வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.விழாவில் அவர் பேசியதாவது:மனிதர்களின் துன்புறுத்தல்களை தடுத்து, அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்பாக, செஞ்சிலுவை சங்கம் செயல்படுகிறது.முன்பெல்லாம் போர்க்களங்களில் மட்டுமே மனிதர்கள் சவால்களை எதிர்கொண்டனர். தற்போதுள்ள சூழலில், இயற்கை பேரிடர், மனித செயல்பாடுகள், சமூக சிக்கல், பொருளாதார நெருக்கடி என, பல வழிகளில் நாம் சவால்களை எதிர் கொண்டு வருகிறோம்.இச்சங்கம் வாயிலாக இளைஞர்கள் இடையே, சமூகப்பணி தொடர்பாக ஆர்வத்தை ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 45 லட்சம் கல்லுாரி மாணவர்கள், 60 லட்சம் பள்ளி மாணவர்கள் உள்ளனர். இவர்களை, இயற்கை பேரிடர் காலங்களில், மக்களுக்கு உதவும் வகையில், தயார் செய்ய வேண்டியது அவசியம். குறைந்தது 80 லட்சம் இளைஞர்கள் இடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தி, இவ்வமைப்பில் இணைக்க வேண்டும்.மாணவர்கள் மற்றும் இளைஞர்களை, செஞ்சிலுவை சங்கத்தில் இணைப்பது குறித்து, நடக்க உள்ள துணைவேந்தர் மாநாட்டில், ஆலோசிக்கப்படும். தற்போது, சமூக கட்டமைப்பு, பொருளாதார நெருக்கடி, மன அழுத்தம் போன்ற காரணங்களால், தற்கொலை செய்வோர் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.இந்தியாவில் ஆண்டுதோறும், 20,000க்கும் மேற்பட்டோர், தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில், தமிழகம் அதிகம் தற்கொலை நடக்கும் மாநிலமாக உள்ளது. இது வேதனை அளிக்கிறது.உரிய தீர்வுநாட்டில் ஒரு லட்சத்திற்கு 12 பேர் தற்கொலை செய்து கொண்டால், தமிழகத்தில் 26 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை என்பது மிகப்பெரிய சமூக சிக்கல். எனவே, இதற்கு உரிய தீர்வு காணும் வகையில், செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், செஞ்சிலுவை சங்கத்தின் தமிழகத் தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.