உள்ளூர் செய்திகள்

ஆந்திர மாநிலம் வெங்கியில் அகழாய்வு தமிழக தொல்லியல் துறை ஆயத்தம்

சென்னை: ஆந்திர மாநிலம் வெங்கியில், இந்த மாத இறுதிக்குள் அகழாய்வை துவக்க, தமிழக தொல்லியல் துறை ஆயத்தமாகி வருகிறது.விஷ்ணு குந்திரனர்கள் வம்சத்தினரின் ஆட்சிப் பகுதியாக இருந்த, ஆந்திராவின் வெங்கி அல்லது வேங்கி நகரம், கடந்த ஏழாம் நுாற்றாண்டில், சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியால் கைப்பற்றப்பட்டது. அதன்பின், சாளுக்கிய மரபினர் அப்பகுதியை ஆண்டனர்.இந்நிலையில், 10ம் நுாற்றாண்டில், தமிழகத்தை ஆண்ட ராஜராஜ சோழன், வெங்கியை கைப்பற்றினார். அவர், அப்பகுதியை ஆளும் உரிமையை அவர்களுக்கே வழங்கி, மண உறவின் வாயிலாக நட்புறவை வளர்த்துக் கொண்டார்.இதனால், சோழர்களுக்கும், கீழை சாளுக்கியர்களுக்கும் இடையே, இணக்கமான சூழல் ஏற்பட்டது. மேலும், ஆந்திராவில், சோழர்கள் கோவில்களை கட்டியதுடன், சமூக முன்னேற்றத்துக்கும் உதவினர்.சோழர்களுக்கு வாரிசு இல்லாத நேரத்தில், சாளுக்கிய மரபில் தோன்றிய முதலாம் குலோத்துங்கன், சோழர் குல அரசனாக முடிசூட்டி, தமிழகத்தை ஆண்டார்.இதனால், கீழை சாளுக்கியர்களின் தலைநகராக இருந்த வெங்கியில் அகழாய்வு மேற்கொண்டால், தமிழர்களுக்கும், அவர்களுக்கும் இருந்த வணிக, கலை, கலாச்சார உறவுகளை அறிய முடியும் என, தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் கூறிவந்தனர்.அதை ஏற்ற தமிழக தொல்லியல் துறை, ஆந்திர அரசின் அனுமதியை பெற்று, மத்திய தொல்லியல் துறையின் அனுமதியை கோரியது.அதுவும் கிடைத்த நிலையில், பட்ஜெட் அறிவிப்பில், தொல்லியல் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, இந்த மாத இறுதிக்குள் அகழாய்வை துவக்க, தமிழக தொல்லியல் துறை தயாராகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்