ஜூன் மாதம் உடனடி மறு தேர்வு மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
பொள்ளாச்சி: பள்ளிக்கு நீண்ட நாள் வராத, தேர்வு எழுதாத மாணவர்களுக்கு, ஜூன் மாதம் உடனடி மறு தேர்வு நடத்தி, தேர்ச்சி பட்டியலில் சேர்த்து உயர் வகுப்பிற்கு அனுப்பி வைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதேபோல, ஒன்று முதல், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித்தேர்வு வரும், 17ம் தேதி வரை நடக்கிறது.அவ்வகையில், இம்மாதம் இறுதிக்குள், மதிப்பெண் பட்டியல் தயாரித்து, தேர்ச்சி விபரம் வெளியிட ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து, பள்ளிக்கு வராதம் மாணவர்கள், தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் உடனடி மறு தேர்வு நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், தேர்ச்சி அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, சில மாணவர்கள், தொடர்ந்து பள்ளிக்கு வருவதை தவிர்க்கின்றனர்.அவர்களின் நலன் கருதியும், தேர்வு எழுதாத மாணவர்களுக்காகவும் ஜூன் மாதம் உடனடி மறு தேர்வு நடத்தப்படுகிறது. முன்னதாக, ஆண்டு இறுதித்தேர்வு முடித்து தேர்ச்சி பெற்றவர்கள் விபரம் பள்ளியில் அறிவிப்பாக இடம்பெறச் செய்யப்படும்.அதற்கேற்ப பள்ளிக்கு நீண்ட நாள் வராத, தேர்வு எழுதாத குழந்தைகள் கண்டறியப்பட்டு, தேர்வு எழுத அறிவுறுத்தப்படுவர். தேர்வு எழுதினால், தேர்ச்சி பட்டியலில் சேர்த்து உயர் வகுப்பிற்கு அனுப்பி வைக்கப்படுவர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.