தகவல் தொடர்பு முக்கிய பங்கு; ஐஎப்எஸ் பயிற்சி அதிகாரிகளிடம் பிரதமர் பேச்சு
புதுடில்லி: தொழில்நுட்பம் சார்ந்த உலகில் தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகிக்கிறது என ஐஎப்எஸ் பயிற்சி அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.2024ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி பயிற்சி அதிகாரிகள், பிரதமர் மோடியை, லோக் கல்யாண் மார்க்கின் 7ல் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். பிரதமர் பயிற்சி அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டு, அரசுப் பணியில் சேர்ந்த பிறகு இதுவரையிலான அனுபவங்கள் குறித்து அவர்களிடம் கேட்டார். பயிற்சி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளிலிருந்து அதிகாரிகள் பயிற்சி பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: உங்கள் பாரதத்தை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாக்கள் மற்றும் விவாதங்கள் மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள இளைஞர்களிடையே இந்தியா குறித்த ஆர்வத்தை நாம் உருவாக்க வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த உலகில் தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகிக்கிறது.தூதரகங்களின் அனைத்து சமூக வலைத் தளங்களையும் ஆராய்ந்து, இந்திய புலம்பெயர்ந்தோருடன் பயனுள்ள தொடர்புக்காக இந்த வலைத்தளங்களை மேம்படுத்த என்ன செய்ய முடியும் என்பதை பயிற்சி அதிகாரிகள் கண்டறிய முயற்சி செய்ய வேண்டும்.விண்வெளி துறையில் வளர்ந்து வரும் இந்திய ஸ்டார்ட்அப்களின் நோக்கத்தை விரிவு படுத்துவதற்கு பிற நாடுகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய வேண்டும். விண்வெளி துறையில் இந்த இடத்தை நிரப்ப இந்தியாவிற்கு ஆற்றல் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.