நோயாளிகளிடம் கனிவாக பேச வேண்டும் தேசிய மருத்துவ ஆணைய தலைவர் பேச்சு
சென்னை: “இளம் மருத்துவர்கள், நோயாளிகளிடம் கனிவாக பேச வேண்டும்,” என, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர், டாக்டர் அபிஜத் சந்திரகாந்த் ஷேத் தெரிவித்தார்.போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், 41வது பட்டமளிப்பு விழா, கல்வி நிறுவன வளாகத்தில், நடந்தது.தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர், டாக்டர் அபிஜத் சந்திரகாந்த் ஷேத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி, வாழ்த்தி பேசியதாவது:மருத்துவ துறையில் புதிதாக தடம் பதிக்கும் இளம் மருத்துவர்கள், நோயாளிகளிடம், கனிவான வார்த்தைகளால் பேச வேண்டும். நோயாளிகளின் பிரச்னைகளை, கவனத்துடன் கேட்டறிய வேண்டும்.நம்பிக்கையுடன் அவர்களை வழி நடத்த வேண்டும். அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் பலன்களை விட, இவை வலிமையானவை. மருத்துவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுதும் மாணவர்களாக இருக்க வேண்டும்.புதிய தொழில்நுட்பங்கள், மருத்துவ ஆய்வுகள், நோய்களுக்கான தீர்வுகள் என, அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.நோயாளிகள், தங்கள் வாழ்வையே மருத்துவர்களிடம் நம்பி ஒப்படைக்கின்றனர். அதற்கு பிரதிபலனாக, மருத்துவ சேவையாற்றும் போது, நெறி சார்ந்து இயக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், 902 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. அதில், தங்கப்பதக்கம் வென்ற மாணவர்களுக்கு, மேடையில் பதக்கம் வழங்கப்பட்டன.விழாவில், ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி நிறுவன இணைவேந்தர் ஆர்.வி.செங்குட்டுவன், துணை இணை வேந்தர் டாக்டர் மகேஷ் வக்கமுடி, துணைவேந்தர் உமா சேகர், பதிவாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவ கல்லுாரி முதல்வர் டாக்டர் பாலாஜி சிங், நிதித்துறை இயக்குநர் ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.