உள்ளூர் செய்திகள்

தொழில்துறைக்கு பெரிய உத்வேகம்; நியூசிலாந்துடன் ஒப்பந்தம் குறித்து பீயூஷ் கோயல் பெருமிதம்

புதுடில்லி: இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொழில் துறைக்கு பெரிய உத்வேகம் அளிக்கும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.டில்லியில் நிருபர்களிடம் பீயூஷ் கோயல் கூறியதாவது: இந்தியாவிலிருந்து, நியூசிலாந்திற்கு இறக்குமதி செய்யக்கூடிய 100 சதவீத பொருட்களுக்கு இனிமேல் சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்படும். கல்வி, விளையாட்டு, கலாச்சாரம், விவசாயம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமை மற்றும் பாரம்பரிய மருத்துவம் ஆகிய துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பாரம்பரிய மருத்துவம் சார்ந்த துறைகளில் ஒரு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது மிகவும் பயன்மிக்க ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாக அமையும். மிக முக்கியமாக, கடந்த 25 ஆண்டுகளில் நேரடி அயல்நாட்டு முதலீடாக வெறும் 70 மில்லியன் டாலர் மட்டுமே இந்தியாவில் முதலீடு செய்திருந்த நியூசிலாந்து, வரும் 25 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர்களை (2 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்யவுள்ளது. இந்த பிரம்மாண்டமான முதலீடு, லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.வணிகம் மற்றும் தொழில்துறைக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும். நாம் இன்னும் துரிதமாக முன்னேறிச் செல்ல இது வழிவகுக்கும். 2030ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வரவிருக்கின்றன. 2036ல் ஒலிம்பிக் போட்டி நடத்த முயற்சி நடக்கிறது. நமது பயணத்தில் விளையாட்டு மேலும் மேலும் ஒரு முக்கிய அங்கமாக மாறுவதை நாம் காணலாம். இவ்வாறு பீயூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்