மாவட்டத்தில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்புவது... எப்போது? பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறி
கடலுார்: கடலுார் வருவாய் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது.கடலுார் வருவாய் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் தொடக்க, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளிகள் சேர்த்து 2224 பள்ளிகள் உள்ளன. அதில் தொடக்கப் பள்ளிகள் மட்டும் 576 உள்ளன.ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவர்கள் முதல் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வந்தனர்.ஆண்டுதோறும் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வேகமாக சரிகிறது.கிராமப் பகுதியில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கில பள்ளியில் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், நகரப்பகுதியில் உள்ள பள்ளியில் சேர்க்கின்றனர்.அதற்கேற்ற போல கிராமப்புற பள்ளிகளில் இருக்கும் மாணவர்களோடு, நகரப்பகுதியில் உள்ள மாணவர்களை ஒப்பிட்டால் கல்வித்தரம் வேறுபடுகிறது. கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் மோசமாக உள்ளது.இதனால் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து ஓரிலக்கத்திற்கு வந்து விட்டது. ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியர், வகுப்பாசிரியர், சத்துணவு அமைப்பாளர், சிற்றுண்டி வழங்கும் ஊழியர் என பணியாளர்கள் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது. கிராமப் புறங்களில் செயல்படும் ஒரு சில பள்ளிகளில் ஊழியர்கள் இருப்பதைக்காட்டிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு முறையாக கையாளப்பட்டது. அதனால் வருகைப்பதிவும் செம்மையாக இருந்தது. ஆனால் தற்போது வருகைப்பதிவேடு முறையாக பராமரிக்கப்படுவதில்லை.பல ஆசிரியர்கள் பள்ளிக்கு சரி வர வருகை தருவது இல்லை. அதை பராமரிக்கும் தலைமையாசிரியர் பணியிடங்கள், பல பள்ளிகளில் காலியாக உள்ளன.கடலுார் கல்வி மாவட்டத்தில், 7 வட்டாரங்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில், 7 வட்டாரங்களும் ஆக மொத்தம், 14 வட்டாரங்கள் உள்ளன.ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்த பட்சம் 10 பணியிடங்கள் என்று வைத்துக் கொண்டால், 140க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. பரங்கிப்பேட்டை போன்ற வட்டாரங்களில் காலிப்பணியிடங்கள் இன்னும் அதிகமாக உள்ளன.மொத்தத்தில் இம்மாவட்டத்தில் 150 முதல் 200 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் என கூறப்படுகிறது.இந்த பணியிடங்களை பூர்த்தி செய்தால், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறைவால் மாநில வரிசைப்பட்டியலில் பின்னுக்கு தள்ளப்படுவது தடுக்கப்படும்.