உள்ளூர் செய்திகள்

தமிழ் வளர்ச்சித் துறையில் அறிவிப்பு இல்லை; போட்டி நடைமுறைகளில் மாற்றம் வருமா?

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டிகள் மற்றும் உதவித்தொகை தொடர்பான அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாணவர்களிடம் தமிழ் கற்றல், வாசிப்பு உள்ளிட்ட தாய்மொழித் திறன்களை வளர்க்க ஆண்டுதோறும் இத்துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய தினங்களையொட்டி நடைபெறும் இந்த போட்டிகளுக்கான அட்டவணை மற்றும் உதவித்தொகை விவரங்கள் வழக்கமாக மே மாத இறுதியில் வெளியிடப்படும். ஜூன் துவக்கத்தில் இருந்து அதற்கான பணிகளும் துவங்கும் என கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போட்டிகள் மற்றும் உதவித்தொகை தொடர்பான அறிவிப்புகள் இன்னும் வெளியாகாததால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் தற்போதைய நடைமுறைகள் தொடருமா அல்லது மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “ஆண்டுதோறும் குறைந்தது 20 போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதோடு கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.ஒரே மாணவர் பல போட்டிகளில் பங்கேற்பதால், ஒரு சிலருக்கே அதிகளவில் உதவித்தொகை கிடைக்கும் நிலை உள்ளது. எனவே, போட்டி நடைமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும்,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்