விடுதி மாணவர்களுக்கு சோப்பு,பேஸ்ட் வழங்குவதில் சிக்கல்: வங்கி கணக்கில் வழங்க வலியுறுத்தல்
தேனி: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் 'பொழிவு கிட்' மூன்று மாதங்களுக்கு மேலாக வழங்காததால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பொருட்களுக்கான தொகையை வங்கி கணக்கில் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1332 பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாணவிகளுக்காக சமூகவிடுதிகள் செயல்படுகின்றன. இங்கு தங்கி 99 ஆயிரம் பேர் படிக்கின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் பேஸ்ட், பிரஷ், குளிக்கும் சோப், துவைக்கும் சோப், பவுடர், தேங்காய் எண்ணெய் வாங்க மாதந்தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு ரூ.100, கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.150 வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்களின் வங்கி கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்பட்டது.ஆனால், சில ஆண்டுகளாக இந்த நிதி தாட்கோவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு குளியல், துவைக்கும் சோப்பு, பேஸ்ட் என 6 பொருட்களை உள்ளடக்கிய 'பொழிவு கிட்' என 3 மாதங்களுக்கு ஒருமுறை மாணவர்களுக்கு வழங்கினர். இந்தாண்டு பள்ளிகள் திறந்த 4 மாதங்கள் ஆகியும் இந்த கிட் வழங்க வில்லை.விடுதி காப்பாளர்கள் கூறுகையில், பெற்றோர்கள் வழங்கும் பணத்தில் தேவையானவற்றை மாணவர்கள் வாங்குகின்றனர். அரசு வழங்கும் சோப்புகள்,பேஸ்டை பயன்படுத்தாமல் வீசுவதால் நிதி வீணாகிறது. ஒரே நிறுவனத்தின் சோப்பை அனைத்து மாணவர்களும் விரும்புவதில்லை. அவர்களின் வங்கி கணக்குகளில் பணம் வழங்கினால் அவர்களுக்கு பிடித்த சோப், பவுடர் உள்ளிட்டவற்றை வாங்கி கொள்வார்கள் என்றனர்.