மாணவர் தற்கொலை விவகாரம்: பள்ளிகளில் புகார் பெட்டி திட்டம் கிடப்பில் கிடக்கு
கோவை: பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கண்காணிப்பு குழுக்களில் அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, வக்கீல், சமூக ஆர்வலர்கள், மாணவர் அமைப்பினரையும் இடம்பெற செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.பீளமேடு, சிருங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமாரின் மகன் அகிலன், 16, அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பள்ளி ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்கள் ஜாதி பாகுபாடு காட்டியதுடன், அவரது உணவுப் பழக்கத்தையும் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அக்., 21ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம், பள்ளி மாணவர்களின் மனநலப் பாதுகாப்பு மற்றும் உளவியல் ஆலோசனையின் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, ஆலோசனையும் ஆதரவும் வழங்க வேண்டியது அவசியமாகியுள்ளது.பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை, பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்வதில்லை.ஆசிரியர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அவை முறையாக செயல்படுகிறதா? 'மாணவர் மனசு' எனும் புகார் பெட்டிகளில் வரும் புகார்களுக்கு உரிய தீர்வு கிடைக்கிறதா? என்பதெல்லாம் கேள்விக்குறியே.பல பள்ளிகளில் புகார் பெட்டிகள் பெயரளவுக்கு மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாகவும், சில பள்ளிகளில் அவை இல்லை எனவும், கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.இந்நிலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்ட அளவில் பள்ளிக் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் கலெக்டருக்கு மனு அளித்துள்ளனர்.அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகளை அமைத்து, வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கண்காணிப்புக் குழுவின் ஆலோசனை கூட்டங்களை மாதந்தோறும் நடத்த வேண்டும், குழுவில் அரசு அதிகாரிகளுடன் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர் அமைப்பினரையும் சேர்க்க வேண்டும் என மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.