பள்ளி மாணவர்களுக்கு கலர் டிவி, ‘சிடி’ மூலம் பாடம் கற்பிப்பு
‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ (எஸ்.எஸ்.ஏ.,) மூலம், ஒன்று முதல் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல் முறையில் பாடம் கற்பிக்கப்படுகிறது. பாடச்சுமையைக் குறைத்து கரும்பலகைகளில் மாணவர்கள் எழுதும் முறையும், லேடர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்றுத் தருவதும், இம்முறையின் முக்கிய அம்சம். கடந்த ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இத்திட்டத்தில், தற்போது, புதியமுறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி, வகுப்பறையில் ‘டிவி’ மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தரப்படும். குறிப்பிட்ட பாடம் ‘சிடி’யாக பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படும். இதைப் பார்த்து மாணவர்கள் பயிற்சி செய்ய வேண்டும். இத்திட்டத்தைச் செயல்படுத்த, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும், கலர் ‘டிவி’யும்., ‘டிவிடி’யும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, ஆங்கிலப் பாடத்திற்கான ‘ஹலோ ஆங்கிலம்’ என்ற தலைப்பிலான ‘சிடி’க்கள் தரப்பட்டுள்ளன. வரும் திங்கள் முதல் ‘சிடி’க்களின் உதவியுடன் பாடம் நடத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அளவில், சில ஒன்றிய பள்ளிகளில் மின் இணைப்பு வசதி இல்லை. இதனால் ‘டிவி’ வழங்கியும் பயனில்லை. விரைவில் மின் இணைப்பு பெற்றுத் தர அரசு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, இத்திட்டம் முழுமையாக மாணவர்களைச் சென்றடையும்.