உள்ளூர் செய்திகள்

குறுக்குவழி நாட்டுக்கு என்றும் உதவாது - திருச்சி கலெக்டர்

மாணவர்கள் ஒழுக்கம், அடிப்படை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் பேசினார். மாவட்ட நலப்பணி நிதிக்குழு சார்பில், எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவியருக்கு பொற்கிழி, சான்று வழங்கும் விழா, திருச்சியில் நடந்தது. மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் பேசியதாவது: இன்றைய சூழலில் குழந்தைகளிடையே போட்டி அதிகரித்துள்ளது. போட்டி போட்டு அனைவரும் நன்றாக படிக்கின்றனர். எங்க காலத்தில் 5 அல்லது 6 பேர் தான் 200க்கு 200 மதிப்பெண் எடுப்பர். தற்போது, 300 பேருக்கு மேல் 200க்கு 200 மதிப்பெண் எடுக்கின்றனர். இது நல்ல வளர்ச்சி. ஆனால், சிறிய விடுதல்கள் மாணவ, மாணவியரிடையே உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் ஓரளவுக்கு அந்தஸ்துள்ள மாணவர்கள் நன்கு படிக்கின்றனர். அதேவேளையில் சாதாரண நிலைக்கு கீழ் உள்ள மாணவர்கள், பஸ்-டே கொண்டாடுவது, ஒழுக்கமின்றி இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மாணவர்களிடையே இரண்டு விதமான மாற்றங்கள் உள்ளன. அதை கல்வியாளர்கள் களைய வேண்டும். சிலர் குறுக்கு வழியில் செல்கின்றனர். குறுக்குவழி நாட்டுக்கு என்றும் உதவாது. நாட்டுக்காகவும் உழைக்க வேண்டும். வாழ்க்கையில் அனைவருக்கும் பணம் தேவை தான். சேவை அடிப்படையில் அனைவரும் உழைக்க வேண்டும். வாழ்க்கையில் நிறைய பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பெரியவர்கள் சொல்படி நடக்க வேண்டும். இன்று நிறைய மாணவர்கள், நீ என்ன சொல்வது..நான் என்ன கேட்பது என்று நினைக்கின்றனர். அது தவறானது. உங்களை விட பெரியவர்கள் படிப்பில் குறைந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு வாழ்க்கை தந்த பாடம் அதிகம். அதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டினர் நமது நாட்டு மாணவர்கள், இளைஞர்களை உதாரணமாக கூறுகின்றனர். ஒழுக்கம், அடிப்படை கட்டுப்பாடுகளை நாம் கடைபிடிக்க வேண்டும். இவை இருந்தால் நமது நாடு இன்னும் நல்ல நிலைக்கு முன்னேறும். வாழ்க்கையில் நன்றி, மன்னிப்பு, வருத்துகிறேன் போன்ற மூன்று வார்த்தைகளை நாம் கூற தயங்கக்கூடாது. இவை மூன்றும் தங்கமான வார்த்தைகள். இவ்வாறு அவர் பேசினார்.செஞ்சிலுவைச் சங்க தலைவர் ஞானராஜ், ரேவதிமுத்துஸ்வாமி, முத்தமிழ் கலை பண்பாடு மைய செயல் தலைவர் சத்தியசீலன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்