சமச்சீர் கல்வி - அரசு வழக்கறிஞரின் வாதம் தொடர்ந்தது
தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை 26ம் தேதி துவங்கியது. இரண்டாம் நாளான இன்று, தமிழக அரசு வழக்கறிஞர் பி.வி. ராவ் வாதாடினார். அவரது வாதத்தின் போது நீதிபதிகள், தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது, சென்னை உயர் நீதிமன்றம், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும், சட்ட திருத்தம் செய்தது எதற்காக என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் பி.வி. ராவ், தமிழக அரசுக்கு கல்வி குறித்தும், சட்ட நுணுக்கங்கள் குறித்தும் ஆலோசனை அளிக்க தகுதியான ஆட்கள் இல்லை. அதனால் தான் தமிழக அரசு இவ்வாறு சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது என்றார். மேலும், சமச்சீர் கல்வியை 2011ம் ஆண்டிலோ அல்லது அடுத்து வரும் ஆண்டுகளிலோ அமல்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அளித்த தீர்ப்பினை சுட்டிக் காட்டிய பி.வி. ராவ், இந்த தீர்ப்பின் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல், தமிழக அரசு சட்ட திருத்தம் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துவிட்டது என்றார். தமிழக அரசு மீது தமிழக அரசு வழக்கறிஞரே குற்றம் சாட்டி பேசியது நீதிபதிகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் அவர் வாதிட்டார். இன்று முழுவதும், தமிழக அரசு வழக்கறிஞரின் வாதமே தொடர்ந்து நடைபெற்றது. நாளை பொது நல மனுதாரர்கள் சார்பில் வாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.