உள்ளூர் செய்திகள்

பின்தங்கிய பகுதிகளில் தனியார் கல்லூரிகளை துவக்க மத்திய அரசு ஒப்புதல்

தனியார் ஆரம்பிக்கும் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதில் மத்திய, மாநில அரசுகளிடம் தனி கொள்கை இருந்து வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் தனியார் மூலம் கல்லூரிகளை ஆரம்பிக்க மத்திய அரசு இதுவரை அனுமதித்ததில்லை. ஆனால், மேற்படிப்பு வசதியில்லாமல் தவிக்கும் மாவட்டங்களை மத்திய அரசு பட்டியலிட்டதில், 374 மாவட்டங்களில் கல்லூரி அமைக்கும் வாய்ப்பு பற்றி ஆராய்ந்துள்ளது. இது தொடர்பாக, மாநில அரசுகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் கடிதம் எழுதியுள்ளது. ‘பின்தங்கிய மாவட்டங்களில் அரசோ, தனியாருடன் அரசு சேர்ந்தோ கல்லூரியை ஆரம்பிக்கலாம்; கல்லூரியை அரசு ஆரம்பித்தாலும் பின்னர், தனியாரிடம் ஒப்படைக்கலாம்’ என்று அதில் கூறியுள்ளது. பின்தங்கிய பகுதிகளில் கல்லூரி ஆரம்பிப்பது பற்றி பரிந்துரை செய்ய அரசு  அமைத்த உயர் கமிட்டி சில மாதங்கள் முன் சமர்ப்பித்த அறிக்கையில், ‘பின்தங்கிய பகுதிகளில் தனியாரை அனுமதித்தால், போதுமான அளவில் லாபம் கிடைக்காவிட்டால், அதை மூடிவிடுவர். அதனால், அரசே தான் கல்லூரிகளை ஆரம்பிக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்திருந்தது. பொருளாதாரத்தில் வளர்ந்த பகுதிகளில் மட்டும் தனியார் கல்லூரிகளை ஆரம்பிக்க அனுமதிக்கலாம்; பின் தங்கிய பகுதிகளில் கல்வித்தேவையை அரசு தான் பூர்த்தி செய்ய வேண்டும்’ என்று கொள்கை முடிவாகவே வைத்திருந்தது. ஆனால், இப்போது அரசு தன் கொள்கையை மாற்றிக்கொள்ளத் தயாராகி விட்டதாக தெரிகிறது. பின்தங்கிய பகுதிகளில் தனியார் கல்லூரி ஆரம்பிப்பதன் மூலம், அரசு செலவை  தவிர்க்கலாம் என்பதால், தனியாரை அனுமதிக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது தொடர்பாக, ஆராய்ந்த பல்கலைக்கழக மானிய கமிஷன் உயர்குழு, ‘அரசு  - தனியார் பங்களிப்பில் பின்தங்கிய பகுதிகளில் கல்லூரிகளை ஆரம்பிக்கக்கூடாது; அரசு தான் பொறுப்பை முழுமையாக ஏற்க வேண்டும்’ என்று பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இதை நிராகரித்துவிட்டது. ‘திறமையான நிர்வாகமும், வலுவான நிதி பின்னணியும் உள்ள தனியார் மூலம் கல்லூரிகளை நிர்வகிப்பதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று கேட்டுள்ளது அமைச்சகம். மத்திய அரசின் கொள்கை மாற்றத்தால், பின்தங்கிய மாவட்டங்களில் தனியார் கல்லூரிகள் அதிக  அளவில் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. நகரத்துக்கு வந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் மாறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்