உள்ளூர் செய்திகள்

பாலியல் கல்வி குறித்த மத்திய அமைச்சர் கருத்து: கல்வியாளர்கள் கண்டனம்

புதுடில்லி: பாலியல் கல்வி குறித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். எனினும் மத்திய அமைச்சர் தன் கருத்துக்கு விளக்கம் அளித்து உள்ளார். யோகா பயிற்சி பா.ஜ.,வை சேர்ந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் ஹர்ஷவர்தன் சமூக வலைதளத்தில் பாலியல் கல்வி குறித்து கருத்துப் பதிவு செய்துள்ளார். இதில் "பள்ளிகளில் நற்பண்புகளை போதிக்கும் கல்வி முறை இடம் பெற வேண்டும். தற்போதைய பாலியல் கல்விக்கு தடை விதிக்க வேண்டும். அதை தவிர்ப்பது நல்லது. பாடத் திட்டத்தில் யோகா கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்" என தெரிவித்து உள்ளார். மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு கட்சியினர் மட்டுமின்றி, கல்வியாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். "மத்திய அமைச்சரின் இந்த கருத்து கடும் கண்டனத்திற்குரியது. மாணவர்களுக்கு பாலியல் குறித்த அறிவு மிக அவசியம். மாணவர்களுக்கு பாலியல் குறித்து பள்ளிகளில் கற்பிக்காவிட்டால், அவர்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வு, வேறு எங்கு கிடைக்கும்?" என மணீஷ் திவாரி கூறியுள்ளார். சந்தேகம் "ஹர்ஷ்வர்தனின் கருத்து, மக்களை கற்காலத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் உள்ளது. அவர், எந்த காலத்தில் வாழ்கிறார் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது" என அசுதோஷ் கூறியுள்ளார். "அனுபவம் வாய்ந்த மருத்துவரான ஹர்ஷ்வர்தனின் இந்த கருத்துகள், ஏற்புடையதாக இல்லை" என டில்லி பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆபாசம் கூடாது இதுகுறித்து ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: பாலியல் கல்வி அவசியம் தான்; எனினும் அது ஆபாசமற்ற முறையில் இருக்க வேண்டும். முந்தயை அரசால் அமல்படுத்தப்பட்ட பாலியல் கல்வி முறையை தான் நிறுத்த வேண்டும் என கூறினேன். 2007ல் அப்போதைய மத்திய அரசு பாலியல் கல்வியை அறிமுகம் செய்த போது பல மாநில முதல்வர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாலியல் கல்வி என்பது, மாணவர்களுக்கு அவசியமானதை மட்டுமே போதிக்க வேண்டும். ஆபாசமாகவும், தவறான எண்ணங்களை தூண்டும் வகையிலும் இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்