உள்ளூர் செய்திகள்

இலவச மடிக்கணினி கேட்டு போராட்டம்: மாணவர்கள் மீது காவலர்கள் தாக்குதல்

திருநெல்வேலி: நெல்லையில் இலவச லேப்டாப் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தாக்கினர். நெல்லை மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்துவிட்டு தற்போது கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்ந்துள்ள மாணவ மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்களில் லேப்டாப் வழங்கப்பட்டதாக அரசின் முத்திரை உள்ளது. ஆனால் லேப்டாப்கள் வழங்கப்பவில்லை. எனவே நேற்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். மாணவர்களுடன் பேசுவதற்கு கல்வித்துறை அதிகாரிகளோ, வருவாய்த்துறை அதிகாரிகளோ வரவில்லை. கலெக்டர் அலுவலகம் முன்பாக உட்கார்ந்து கோஷங்களை எழுப்பியபடி இருந்த மாணவர்களை கலைந்துபோகுமாறு போலீசார் எச்சரித்தனர். மாணவர்கள் மறுத்தனர். அங்கிருந்த ஆயுதப்படை போலீசார் மாணவர்களின் சட்டையை கிழித்து தாக்கினர். மாணவர்களும் போலீசாரிடம் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை கலெக்டர் கருணாகரன் அழைத்து பேசினார். இருப்பினும் லேப்டாப் வழங்குவது குறித்து உறுதிமொழி அளிக்கவில்லை. எனவே மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழகம் முழுவதும் விடுபட்டவர்களுக்கு லேப்டாப் வழங்க கோரியும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்