ஸ்வீடனில் உயர்கல்வி பயில திண்டுக்கல் காந்திகிராம பல்கலை மாணவர் தேர்வு
திண்டுக்கல்: ஸ்வீடன் உப்சாலா பல்கலையில் உயர்கல்வி பயில, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலை எம்.டெக்., மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனை சேர்ந்த ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளில் இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில எமின்ட் திட்டத்தை ஐரோப்பிய ஆணையக்குழு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், காந்திகிராமம், மும்பை, கான்பூர், கேரளா, புனே உள்ளிட்ட 9 பல்கலைகளை சேர்ந்த 13 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் காந்திகிராம பல்கலை எம்.டெக்., (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி) மாணவர் என்.கோபிநாத் ஸ்வீடன் உப்சாலா பல்கலையில் பயில தேர்வு செய்யப்பட்டுள்ளார். செமஸ்டர் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு எம்.டெக்., பிரிவில் காற்றாலை மின்திட்ட மேலாண்மையில் ஓராண்டு பயில உள்ளார். பயண செலவு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஐரோப்பிய ஆணையம் வழங்குகிறது. கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.80 ஆயிரம் வழங்கப்படும். ஐதராபாத்தை சேர்ந்த கோபிநாத் ஆக.,24 ல் ஸ்வீடன் செல்ல உள்ளார். படிப்பு முடித்தவுடன், உப்சாலா பல்கலை அளிக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் காந்திகிராம பல்கலை பட்டம் வழங்க உள்ளது. உலகளவில் உப்சாலா பல்கலை 60 வது இடத்தில் உள்ளது.