உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி தேர்வில் வினாத்தாள் சப்ளையில் குளறுபடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் நடந்த தேர்வில், மாணவர்களுக்கு வினாத்தாள் சப்ளையில் குளறுபடி ஏற்பட்டதால், தேர்வு எழுத முடியாமல், மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். திருவள்ளுவர் பல்கலைக்கு உட்பட்ட, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மற்றும் திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியை சேர்ந்த, 1,450 மாணவர்களுக்கு, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில், நேற்று தேர்வு நடந்தது. வினாத்தாளில் முறைகேடுகளை தடுக்க, திருவள்ளுவர் பல்கலை சார்பில், ஆன்லைன் மூலம் வினாத்தாளை, கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பி, அதனை பிரிண்ட் எடுத்து, மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று, 1,000 மாணவர்களுக்கு மட்டும், வினாத்தாள், ஆன்லைன் மூலம் வந்தது. அவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மற்ற, 450 மாணவர்களுக்கு, கேள்வித்தாள் அனுப்பவில்லை. அதையடுத்து, அரசு கலைக்கல்லூரி நிர்வாகம், திருவள்ளுவர் பல்கலை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு, இதுபோன்ற குளறுபடி ஏற்பட்டுள்ளதை தெரிவித்தனர். அதையடுத்து, ஆன்லைன் மூலம் கேள்வித்தாளை மீண்டும் அனுப்புவதற்கான நடவடிக்கையில், பல்கலை நிர்வாகம் ஈடுபட்டது. இதில், நேற்று மாலை, 5 மணியளவில், 60 மாணவர்களுக்கு மட்டும் வினாத்தாள் வந்தது. அந்த வினாத்தாள் கிடைத்த மாணவர்கள், மாலை, 5 மணி முதல் இரவு, 8 மணி வரை, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மற்ற, 390 மாணவர்கள், தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், திருவண்ணாமலை பெங்களூரு சாலையில், திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்து, வரும், 28ம் தேதி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என, கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. அதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு, மாணவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்