கள்ளர் சீரமைப்பு, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை
ஒட்டப்பிடாரம் சுடலைமணி தாக்கல் செய்த மனு: நான், மறவர் சமுதாயம் மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 98 மதிப்பெண் பெற்றேன். இடைநிலை ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அழைத்தது. அரசு கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளில், 64 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், இந்து பிரமலை கள்ளர் சமுதாயத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 669 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என, ஆக., 21ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஒவ்வொரு பிரிவினருக்கும், தனித்தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதை மீறி, அனைத்துப் பணியிடங்களிலும், குறிப்பிட்ட பிரிவினர் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. கள்ளர்கள், ஆதிதிராவிடர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எச்.ஆறுமுகம் ஆஜரானார். பணி நியமனங்களுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.