உள்ளூர் செய்திகள்

சாதனை மாணவர்களுக்கு ‘தினமலர்’ நிறுவனர் உருவம் பொதித்த வெள்ளிப் பதக்கம்

புதுச்சேரியில் நடந்த, ‘தினமலர் கல்விமலர்’ ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழாவில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவ மாணவியருக்கு, தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் உருவம் பொதித்த வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. செய்தி சேவையோடு, கல்வி சேவையும் ஆற்றிவரும் தினமலர் நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காக, அவர்கள் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஆலோசனை வழங்கும் வகையில், ’ஜெயித்துக்காட்டுவோம்’ கல்வித் திருவிழா நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான ’ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி, லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, புதுச்சேரி நகரப் பகுதி மாணவர்கள் மட்டுமின்றி, சுற்றியுள்ள கிராமப்புற பள்ளிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் அதிகாலை முதலே, ஆர்வமுடன் குவிந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பாடவாரியாக கேள்விகள் அடங்கிய புளு பிரிண்ட், உடல் ஆரோக்கியத்திற்கு ஆலோசனை வழங்கும் ’உடம்பும் மனசும் நல்லா இருக்கனும்’ புத்தகம், ஜெயித்துக் காட்டுவோம், குறிப்பெடுக்க நோட்டு மற்றும் பேனா ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சி காலை 8.30 மணிக்கு துவங்கி, மதியம் 1:30 மணி வரை நடந்தது. சுப்ரமணிய பாரதியார் பள்ளி ஆசிரியை பூங்குழலி பெருமாள் தமிழ் பாடம் குறித்தும், தட்டாஞ்சாவடி சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை மரி கிளாடியஸ் பிலோமினா ஆங்கிலப் பாடத்திற்கும், சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வீரப்பன் கணக்கு பாடத்திற்கும், புதுச்சேரி பள்ளி துணை ஆய்வாளர் அறிவியல் பாடத்திற்கும், விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாலு சமூக அறிவியல் பாடத்திற்கும் ஆலோசனை வழங்கினர். பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி மதியம் 2:00 மணிக்கு துவங்கியது. இதில், குருசுக்குப்பம் என்.கே.சி., அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவராமரெட்டி வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடம் குறித்தும், கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் டேவிட் இலியாஸ் பொருளியல் பாடம் குறித்தும், புதுச்சேரி கல்வித் துறையைச் சேர்ந்த ஸ்ரீதரன் வணிகக் கணிதம் குறித்தும், ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சவுந்திரபாண்டியன் கணினியியல் பாடம் குறித்தும், மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினர். திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கருணாகரன் கணக்கு பாடம் குறித்தும், கல்வித்துறை மாநில பயிற்சி மைய ஆசிரியர் பூபதி இயற்பியல் பாடம் குறித்தும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய திருநாராயணன் வேதியியல் பாடம் குறித்தும், லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முல்லைவாணன் தாவரவியல் பாடம் குறித்தும், கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி முனைவர் விஜயன் விலங்கியல் பாடம் குறித்தும் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்க முதலாவதாக வந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களின் கேள்விகளுக்கு சரியான விடை அளித்த மாணவ, மாணவியருக்கும் பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது. சாதனை மாணவர்களுக்கு டி.வி.ஆர்., வெள்ளி பதக்கம் பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவ மாணவியருக்கு, தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் உருவம் பொதித்த வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு 497 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்த அமலோற்பவம் பள்ளி மாணவர் வசந்த், பேட்ரிக் பள்ளி மாணவி தீபிகா, திருக்கனூர் சுப்ரமணிய பாரதியார் பள்ளி மாணவி சமீரா பேகம். இரண்டாம் இடம் பிடித்த அமலோற்பவம் பள்ளி மாணவிகள் நஹிம்பானு, ஹரிதா, பேட்ரிக் பள்ளியை சேர்ந்த சந்திரநாதன், நித்யஸ்ரீ, ஹேமலதா, பெத்திசெமினார் பள்ளி மாணவர்கள் ராகேஷ், பிரசன்னகுமார், ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப்பள்ளி நந்தினி, திருக்கனூர் சுப்ரமணிய பாரதியார் பள்ளியை சேர்ந்த பரத்குமார், ராஜேஸ்வரி, இமாகுலேட் பள்ளி மாணவி உறுதிமொழி ஆகியோருக்கு, தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் உருவம் பொதித்த வெள்ளி பதக்கம் வழங்கி, சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்