உள்ளூர் செய்திகள்

பரிசுகளை அள்ளிய அரசுப் பள்ளி மாணவர்கள்; உதவி, ஊக்குவிப்புதான் இல்லை

மதுரை: மதுரையில் நடந்து முடிந்த மூன்று மாவட்ட அளவிலான உலக திறனாய்வு தடகளப் போட்டிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் பரிசுகளை அள்ளினர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் திறனாய்வு போட்டிகள் நடந்தன. இதில் குறுவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்றனர். மதுரையில் நடந்த மண்டலப் போட்டிகளில் முதல் பத்து இடங்களில் வந்த மாணவர்களுக்கு பணப் பரிசு வழங்கப்பட்டது. மதுரை அரசுப் பள்ளி மாணவர்கள்தான் அதிகளவில் வெற்றி பெற்றனர். மதுரை கல்வி மாவட்டத்தில் வெற்றி சதவீதம் குறைவு. மேலுாரில் கொடுக்கம்பட்டி, கருங்காலக்குடி, உறங்கான்பட்டி, தும்பைப்பட்டி, மேலுார், கீழவளவு, சொக்கலிங்கபுரம், மேலவளவு, கோட்டநத்தம்பட்டி, தனியாமங்கலம், எம்.சத்திரப்பட்டி, கருவனுார், தெற்கு தெருவைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பரிசு பெற்றனர். உசிலம்பட்டியில் அம்மாபட்டி, எழுமலை, உசிலம்பட்டி, எழுமலை, சேடபட்டி மாணவர்களும் பரிசு வென்றனர். பங்கேற்பு குறைவு தான்: மண்டல அளவில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் போட்டி நடக்குமிடத்திற்கு வந்து  செல்வதற்கான பயணத்தொகை கூட இல்லாததால் பெரும்பாலான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவில்லை. குறுவட்ட அளவில் போட்டிகள் நடக்கும் போதும் பயணப்படி, அலவன்ஸ் வழங்கினால் திறமையான மாணவர்களை போட்டிக்கு தயார்செய்ய முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்