உள்ளூர் செய்திகள்

பாஸ் புத்தகம் வழங்க தாமதம்; மேல்படிப்பு சென்ற மாணவர் அவதி

குளித்தலை: தெலுங்கபட்டி அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் பாஸ் புத்தகம் பெறப்பட்டு, திரும்ப வழங்கப்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கரூர் மாவட்டம், தோகைமலை அடுத்த, தெலுங்கபட்டி அரசு ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில், 200 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களுக்கான கல்வி உதவித்தொகை, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், அந்தந்த மாணவ, மாணவியரின் வங்கி கணக்கில் வழங்கப்படுகிறது. ஆனால், தெலுங்கபட்டி அரசு ஆதிதிராவிடர் பள்ளியில், 2014-2015, எஸ்.எஸ்.எல்.சி., வகுப்பு படித்த தெலுங்கபட்டியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரிடம், கல்வி உதவித்தொகைக்கான வங்கி பாஸ் புத்தகங்களை கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன் பள்ளி நிர்வாகம் பெற்றுள்ளது. இந்த மாணவர்கள் தற்போது, பிளஸ் 1 வகுப்பு, பாலிடெக்னிக், டிப்ளமோ போன்ற பல்வேறு பிரிவுகளில் கல்வி பயில வெளிமாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். இந்த மாணவ மாணவியர்களின் கல்வி உதவித்தொகைக்கான பாஸ் புத்தகத்தை தலைமை ஆசிரியர் பெற்று வைத்திருப்பதால், தற்போது பயிலும் கல்வி உதவித்தொகையும் கிடைக்காமல் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சீதாபதி கூறுகையில், மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான வங்கி கணக்கு புத்தகங்களை தலைமை ஆசிரியர் வைத்திருக்க தேவையில்லை. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய காசோலை தொடர்பாக விசாரணை செய்கிறோம், என்றார். இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் கூறியதாவது: கல்வி உதவித்தொகை கணக்கில் ஏற்றப்பட்டுள்ளதா என பார்ப்பதற்காக மாணவர்களிடம் பாஸ் புக்கை பெற்றுள்ளேன். மொத்தம், 54 மாணவர்களில், ஒன்பது பேர் இன்னும் பாஸ்புக்கை தர வில்லை. வங்கி மூலம் கல்வி உதவித்தொகை பாஸ்புத்தகத்தில் பதிவு செய்த பின், மாணவர்களிடம் பதிவேட்டில் கையொப்பம் பெற்று, பாஸ்புத்தகம் திரும்ப வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்