பள்ளி தீ விபத்தில் நஷ்டஈடு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், பலியான மற்றும் காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு, நஷ்டஈடு தொகையை உயர்த்த கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் நடந்த தீ விபத்தில், ௯௪ குழந்தைகள் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். உரிய இழப்பீடு வழங்க கோரி, பலியான குழந்தையின் தந்தை இன்பராஜ், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன், நஷ்டஈடு தொகையை நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்தார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களில், மூன்று பேருக்கு ஆறு லட்சம் ரூபாய்; மூன்று பேருக்கு, ஐந்து லட்சம் ரூபாய்; மற்றவர்களுக்கு தலா, ௫௦ ஆயிரம் ரூபாய் என, நஷ்டஈடு நிர்ணயிக்கப்பட்டது. நஷ்டஈடு தொகை போதுமானதாக இல்லை; இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, ௨௫ லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு, ௨௦ லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, வழக்கறிஞர் தமிழரசன் மனு தாக்கல் செய்தார். இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க, தலைமை செயலர் மற்றும் பள்ளி கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை, ௧௩க்கு, முதல் பெஞ்ச்&' தள்ளிவைத்தது. ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கும், நோட்டீஸ் வழங்க, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.