உள்ளூர் செய்திகள்

நாளிதழ் படித்து அறிவு வளர்த்தேன்: ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்தவர் பேட்டி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இரண்டாம் முறையாக வெற்றி பெற்றி ஐ.ஏ.எஸ்., ஆகிறார். உடுமலை, வல்லக்குண்டாபுரத்தை சேர்ந்தவர் நாகரத்தினம். பொள்ளாச்சி சப் - டிவிஷனில், போலீஸ் எஸ்.ஐ.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரது மகன் வெங்கடேஷ் பிரபு. 2017ம் ஆண்டு சென்னை பல்கலையில், எம்.ஏ., அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர். கடந்த, 2018ல் எழுதிய தேர்வில், ஐ.எப்.எஸ்., பிரிவில் தேர்வு செய்யப்பட்டு, உத்ரகண்ட் மாநிலம், டேராடூனில் பயிற்சி பெறுகிறார். இருந்தாலும், ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற லட்சியத்துக்காக, 2019 ஜூனில் நடந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் பங்கேற்று தேர்வானார். தற்போது, ஐ.ஏ.எஸ்., அல்லது, ஐ.ஆர்.எஸ்., அதிகாரிக்கான தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.டேராடூனில் உள்ள வெங்கடேஷ் பிரபு, நமது நிருபரிடம் தொலைபேசியில் கூறியதாவது:எனது தாத்தா தினசரி நாளிதழ்களை படிப்பதில் ஆர்வம் உள்ளவர். அவரை பார்த்து வளர்ந்ததால், தினமும் நாளிதழ்கள் படிக்கும் வழக்கம் இயல்பாகவே ஏற்பட்டது. இது, உலக நடப்புகளை விரல் நுனியில் வைத்திருக்கும் திறமையை கொடுத்தது. கல்லுாரி முடித்ததும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.தேர்வில் தேர்ச்சி அடைந்து, ஐ.எப்.எஸ்., பதவிக்கு இடம் கிடைத்தாலும், ஐ.ஏ.எஸ்., லட்சியம் துரத்தியது. தற்போது, ஐ.ஏ.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., பதவிக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்த பெற்றோருக்கும், என் உலக அறிவை வளர்த்த நாளிதழ்களுக்கும் நன்றி. இவ்வாறு, வெங்கடேஷ் பிரபு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்