உள்ளூர் செய்திகள்

முயற்சித்தால் எதிர்பாராத பரிசு கிடைக்கும்: உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு

புதுடில்லி: நாம் பாதி துாரம் சென்றால் கடவுள் மீதி துாரத்துக்கு கைப்பிடித்து அழைத்துச் செல்வார் என உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசினார்.தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் ஆகியோருக்கு, டில்லி தமிழ்ச் சங்கம் மற்றும் தினமலர் நாளிதழ் சார்பில் டில்லி தமிழ்ச் சங்கத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.பெரிய பொறுப்புநீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:பாராட்டுவதற்கு நல்ல மனம் வேண்டும். பாராட்டு பெறுவோருக்கும் அதற்கான தகுதி வேண்டும். எங்களுக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ, இந்தச் சங்கத்தின் பாராட்டு எங்கள் பணிக்கு உந்து சக்தியாக இருக்கும். தமிழ் பேசுவதால் மட்டுமே ஒருவன் தமிழன் அல்ல. தமிழ் என்பது ஒரு வாழ்வு முறை. எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த ஆசான், நீதிபதி ராமசுப்பிரமணியன்.தமிழன் என்பவன் யார்? எவன் தமிழனாக முடியும்?மொழி மட்டும் தமிழன் அடையாளம் அல்ல. அவனுடைய எண்ணம், செயல் இவை அனைத்தும் சேர்ந்துதான் ஒருவன் தமிழனாக முடியும் என்கிறார் பாண்டிய இளம்பெருவழுதி என்ற மன்னன் கூறுகிறார். உயர்ந்த குறிக்கோளோடு கொண்ட கொள்கை மாறாமல், தனக்காக இல்லாமல் மற்றவருக்காக எவன் வாழ்கிறானோ அவன் தமிழன். இந்திய நாட்டின் தலைமை வழக்கறிஞர் தமிழர் வெங்கட்ரமணி பதவி வகிக்கிறார். இது மிகவும் பெரிய பொறுப்பு. அவருடைய பணி சிறக்க என் வாழ்த்துகள்.இன்று நான் நல்ல நீதிபதி என்று சொல்கின்றனர் என்றால், அதற்கு முற்றிலும் காரணம் நீதிபதி ராமசுப்பிரமணியம். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் வராது. பதவியில் இருக்கும்போது பாராட்டுவது பெரிய விஷயம் அல்ல. ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியனை பாராட்டும் டில்லி தமிழ்ச்சங்கத்துக்கு என் பாராட்டுக்கள். பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களைத்தான் பாராட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசியதாவது:இந்தப் பாராட்டுக்களை எல்லாம் கேட்டு பிரமையில் இருந்து விடாதே. இதை பொறுப்பாக கருத வேண்டும் என்றுதான் இந்தப் பாராட்டு விழாவை கருதுகிறேன். நான் என் சுயசரிதையைக் கூற வரவில்லை. ஆனால், வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை நினைத்துப் பார்த்தால், பல வாய்ப்புகள் விதியின் விளையாட்டால் வந்திருக்கின்றன. வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதியாகி விட்டோம். அதனால் நாம்தான் நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர் என்று ஒருநாளும் நினைத்தது இல்லை.விதியின் விளையாட்டால்தான் இந்தப் பதவி கிடைத்திருக்கிறது என்றுதான் கருதுகிறேன். நான் கோவையில் வழக்கறிஞர் பணி செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். ஆங்கிலம், தமிழ் தட்டச்சு பயிற்சியும் பெற்று விட்டேன். அப்போது, குடும்பத்தில் ஒரு விழாவுக்காக என் தந்தை செங்கோட்டைக்கு சென்றார். சென்ற இடத்தில் என் தந்தையிடம், டில்லியில் பணிபுரியும் வழக்கறிஞர் லட்சுமி குமாரியிடம் என்னை அனுப்பி வைக்குமாறு என் சித்தப்பா கூறியுள்ளார்.கைவிடக்கூடாதுஅதன்படி நான் புதுடில்லி வந்தேன். டில்லியில் முதன் முதல் உணவு லட்சுமி குமார் தாய் அளித்தார். அங்கிருந்துதான் வைத்தியநாதன் அறிமுகம் ஆனார். அவர் மூலமாக வழக்கறிஞர் வேணுகோபாலிடம் ஜூனியராக வேலை கிடைத்தது. கடுமையான முயற்சி செய்தேன். அதற்கான வாய்ப்புகளும் வந்தன. நாம் பாதி துாரம் சென்றால், மீதி துாரத்துக்கு கடவுள் அழைத்துச் செல்வார். எனவே, இளைஞர்கள் முயற்சியைக் கைவிடக்கூடாது. முயற்சித்தால் எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.டில்லி தமிழ்ச் சங்க தலைவர் சக்தி பெருமாள், செயலர் முகுந்தன், உச்ச நீதிமன்ற மற்றும் டில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்