ஐ.டி.ஐ., தேர்வில் புதுச்சேரி மாணவி அகில இந்திய அளவில் முதலிடம்
புதுச்சேரி: ஐ.டி.ஐ., பொதுத்தேர்வில் தையல் தொழில்நுட்ப பிரிவில் புதுச்சேரி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய மாணவி, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.மத்திய அரசு பயிற்சிப் பிரிவு இயக்குனரகம் இந்திய அளவில் அனைத்து ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ் பெறுகின்றனர்.கடந்த ஜூன் மாதம் நடந்த ஐ.டி.ஐ., பொதுத் தேர்வில் புதுச்சேரி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில், தையல் தொழில்நுட்பப் பிரிவில் பயிற்சி பெற்ற மாணவி ஜீவியா இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை மத்திய அமைச்சரிடம் இருந்து அந்த மாணவி பாராட்டு சான்றிதழ் பெற்றார். புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை செயலர் முத்தம்மா, அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்தார். பயிற்சி பிரிவின் துணை இயக்குநர் சரவணன், அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் வசுந்ராதேவி ஆகியோர் உடனிருந்தனர்.