சமூக சீர்திருத்தவாதி கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு
பீஹார்: பீஹார் முன்னாள் முதல்வரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான கர்பூரி தாக்கூருக்கு, மறைவுக்கு பிறகான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.பீஹார் முன்னாள் முதல்வரும், பாரதிய கிராந்தி தள தலைவருமான கர்பூரி தாக்கூர், 1970 - 71 மற்றும் 1977 - 79ல் இருமுறை பீஹார் முதல்வராக பதவி வகித்துள்ளார். இவரது மகன் ராம்நாத் தாக்கூர், ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜ்யசபா எம்.பி.,யாக தற்போது பதவி வகித்து வருகிறார்.மிகப் பெரும் சமூக சீர்திருத்தவாதியான கர்பூரி தாக்கூர் முதல்வராக பதவி வகித்தபோது, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அரசு வேலைகளில், 26 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இவர் 1978ல் அமல்படுத்திய இட ஒதுக்கீட்டு கொள்கை, பின்நாளில் மண்டல் கமிஷன் பரிந்துரைக்கு வித்திட்டது.இவர் பீஹார் கல்வி அமைச்சராக பதவி வகித்த போது, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வாழும் பகுதிகளில் பள்ளி, கல்லுாரிகளை திறந்தார். ஆங்கிலம் கட்டாய பாடமாக இருந்ததை ரத்து செய்தார்.நிலச்சுவான்தார்களிடம் இருந்து நிலங்களை கைப்பற்றி, நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கினார். இதன் காரணமாக அவர், மக்களின் நாயகன் என போற்றப்பட்டார்.நேர்மையான அரசியல் தலைவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் வாழ்ந்து மறைந்த கர்பூரி தாக்கூருக்கு, மறைவுக்கு பிறகான பாரத் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இவரது நுாற்றாண்டு பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.