அரசு பள்ளி மாணவர்களின் கல்வியில் மேலாண்மை குழு அக்கறை அவசியம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு, திருவள்ளூரில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், முன்னிலையில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது.இக்குழுவினர், மாணவர்களின் கல்வித் தரத்தை முன்னேற்ற, ஆசிரியர்களுடன் இணைந்து அக்கறையுடன், ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியர் இந்த ஆண்டு, அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, ஆசிரியர்களை வேலை வாங்க வேண்டும்.பள்ளிக்கு வராத குழந்தைகளை, பெற்றோர்களுடன் பேசி, பள்ளிகளில் சேர்க்க முயற்சிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள குறைகளை மட்டுமே பேசாமல், அவற்றை நிவர்த்தி செய்யவும் முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், கடம்பத்துார் ஒன்றியம், நமச்சிவாயபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெகதீஷ்குமார், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 10 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினார்.அவருக்கும், பள்ளி ஆசிரியர் மணிமாறன், மேலாண்மை குழு ராஜகுமாரி ஆகியோர் மற்றும் சிறப்பாக பணியாற்றிய பள்ளி மேலாண்மை குழுவினருக்கும், கலெக்டர் கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.