ஆட்டோ மாமாவுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கேரள பள்ளி மாணவர்கள் அசத்தல்
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அருகே, பள்ளி ஆட்டோ டிரைவருக்கு மாணவர்கள் நினைவுப்பரிசு வழங்கியது வைரலாகியுள்ளது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பரளியை சேர்ந்தவர் சக்கீர ஹுசைன். ஆட்டோ டிரைவரான இவர், 15 குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அழைத்து செல்கிறார். இவரை, மாணவர்கள் ஆட்டோ மாமா என, அன்புடன் அழைக்கின்றனர். தேர்வுகள் முடிந்து கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆட்டோவில் பயணிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, சக்கீர் ஹுசைன் பிரியாணி விருந்தளித்தார். மாணவர்களும், அவருக்கு கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கினர். இதை, மாணவர்களில் ஒருவர் மொபைல்போனில் வீடியோ எடுத்து சமூகஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி உள்ளது. இது குறித்து சக்கீர் ஹுசைன் கூறியதாவது:குழந்தைகள் இப்படி ஒரு அன்பு பரிசு அளிப்பார்கள் என நினைத்து கூட பார்க்கவில்லை. இந்த சர்ப்ரைஸ் கிப்ட் எனக்கு கிடைத்த பொக்கிஷம் ஆகும். நான் கைக்கடிகாரம் கட்டி இருந்தேன். சேதம் அடைந்ததை தொடர்ந்து புது கடிகாரம் வாங்கவில்லை. என் தேவையை அறிந்து, கடிகாரத்தை பரிசாக அளித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பள்ளி விடுமுறை விடும் போது, சிற்றுண்டி வாங்கி குழந்தைகளுக்கு அளிப்பது வழக்கம். இம்முறை ரமலான் நோன்பு காலம் என்பதால், வீட்டில் தயாரித்த பிரியாணியை பார்சல் செய்து குழந்தைகளுக்கு அளித்தேன். இவ்வாறு, அவர் கூறினார்.