உயர்கல்வி வழிகாட்டுதல் சிறப்பு நிகழ்ச்சி: மாணவர்களை ஊக்குவிக்க அறிவுறுத்தல்
உடுமலை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளுக்கு, பெற்றோர் முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்த பின், மாணவர்களின் உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு நிகழ்ச்சி, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் உயர்தர ஆய்வகங்கள் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் ஏப்., 3ம் தேதி முதல் நடக்கிறது.உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அரசுப்பள்ளிகளிலும், இந்த வழிகாட்டுதல் வகுப்புகள் ஆன்லைனில் நடக்கிறது. இதில் உயர்கல்வி சேர்க்கைக்கான வல்லுநர்களின் நேரடி வழிகாட்டுதல்கள், வீடியோ உள்ளடக்கம் வாயிலாக, பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் படிப்புகள் குறித்து அட்டவணைப்படி வகுப்புகள் நடக்கிறது.ஆனால், இதற்கு மாணவர்களிடம் வரவேற்பு குறைந்துள்ளது. பொதுத்தேர்வு முடிந்து விட்டதால், மாணவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். இருப்பினும், அவர்களின் உயர்கல்விக்கான பயனுள்ள நிகழ்ச்சியாக இருப்பதால், பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டுமென ஆசிரியர்கள் அறிவுறுத்துகின்றனர்.பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:தற்போதுள்ள சூழலில், பல்வேறு வகையான படிப்புகள் அறிமுகமாகியுள்ளன. ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு மாணவர்களுக்கு குறைவாகத்தான் உள்ளது. மேலும் தங்களுக்கு பிடித்த துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்கள், அவர்களுக்கான பல வாய்ப்புகள் குறித்து, இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, அறிந்து கொள்ளலாம். பல வல்லுநர்களின் வழிகாட்டுதல் மாணவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.எந்த துறையில் எப்படி சாதிக்கலாம் என்பதையும் அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் பெற்றோரும் இதற்கு முயற்சி எடுத்து, அவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். இவ்வாறு கூறினர்.