நாட்டை உயர்த்த வேண்டியது கல்வி நிறுவனங்களின் கடமை!: கவர்னர் ரவி
காஞ்சிபுரம்: உலகின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் அளவிற்கு, நாட்டை உயர்த்த வேண்டியது, கல்வி நிறுவனங்களின் கடமை என கவர்னர் ரவி பேசினார்.காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துார் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ வித்யாலயா பல்கலை சார்பில், ஆதிசங்கரரின், 2,500வது ஆண்டு சித்தியடைந்த தினம் மற்றும் மூன்று நாள் சமஸ்கிருத கருத்தரங்க துவக்க விழா நடந்தது.ஏனாத்துார் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ வித்யாலயா பல்கலை வேந்தர் வேம்படி குடும்ப சாஸ்திரி தலைமை வகித்தார். காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மூன்று நாள் சமஸ்கிருத கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:பாரதம் என்பது மிகப்பெரிய தேசம். இங்கு, ரிஷிகள், மகான்கள் வாழ்ந்து பல நல்ல அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இதனால், தெய்வீக தன்மையுடன் மிளிர்கிறது. இந்த கல்வி நிறுவனம், தர்மத்தின் ஊற்றுகளாக தேசம் முழுதும் பரவி இருக்கிறது.இன்றைய சூழலில், உலகின் தலைமை பொறுப்பை இந்தியாவை ஏற்க செய்யும் அளவுக்கு, நாட்டை உயர்த்த வேண்டியது கல்வி நிறுவனங்களின் கடமையாகும்.இவ்வாறு அவர் பேசினார்.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமச்சந்திரன், பல்கலை பதிவாளர் ஸ்ரீராம் உட்பட பலர் பங்கேற்றனர்.