அரசு கல்லூரியில் பொது கலந்தாய்வு: சைக்காலஜி பாடப் பிரிவுக்கு வரவேற்பு
கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன், சைக்காலஜி, புவியியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நேற்று நடத்தப்பட்டது. சைக்காலஜி பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தினர்.அரசு கலைக் கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வு மே 30ம் தேதி துவங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பி.காம், பி.காம் சி.ஏ., பி.காம் ஐ.பி., பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.எஸ்சி., ஐ.டி., பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவிஅமைப்பியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து, பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன், சைக்காலஜி, புவியியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நேற்று நடந்தது. 223 இடங்களுக்கு 206 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 17 காலியிடங்கள் உள்ளன.புள்ளியியல், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், பாதுகாப்பியல், பொருளாதாரம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு இன்றும், வரலாறு, சுற்றுலா மற்றும் மேலாண்மைத் துறை, தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 15ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.