இடமாறுதலில் சென்ற தலைமை ஆசிரியர் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு, அரங்கத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. அங்கு, 63 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு, 2011 முதல், 2024 வரை தவமணி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். கடந்த, 2ல் அவர் பணி மாறுதல் பெற்று, சேலம், சோளம்பள்ளம் மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு சென்றார்.இதனால் அந்த கிராம மக்கள், தவமணியை மீண்டும் அரங்கத்தில் பணியமர்த்த வேண்டும் என கூறி, அவர்களது குழந்தைகளை நேற்று பள்ளிக்கு அனுப்பவில்லை. ஏற்காடு வட்டார கல்வி அலுவலர் ஷேக் தாவூத், வருவாய், போலீஸ் துறையினர் வந்து, பெற்றோரிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, 36 குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மீதி குழந்தைகளின் பெற்றோரிடம், ஏற்காடு போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, 15 முதல், பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர் தெரிவித்தனர்.